வரும் 2018ம் ஆண்டு முதல் அனைத்து ரக இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இருசக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, அதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது.
இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகளும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில், இருசக்கர வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில்,
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அல்லது சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, 125 சி.சி.க்கும் குறைவான இன்ஜின் கொண்ட இருசக்கர வாகன மாடல்களில் சிபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த செயல்பாடு கொண்ட சிபிஎஸ் பிரேக் சிஸ்டமும்,
125 சி.சி.க்கும் மேலான இன்ஜின் கொண்ட மாடல்களில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு கொண்ட ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிதாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் இருசக்கர வாகன மாடல்களுக்கு 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலும்,
ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடல்களுக்கு 2018ம் ஆண்டிலிருந்தும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்துவது கட்டாயமாகிறது.
இப்புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் மூலம், இருசக்கர வாகனங்களின் பாதுகாப்பு மேம்படும் என்பதுடன், விபத்துகளின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்புள்ளது.
இப்புதிய பிரேக் சிஸ்டத்தை பொருத்துவதால், இருசக்கர வாகனங்களின் விலை சற்று அதிகரிக்கும். இருப்பினும், கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்கிறது மத்திய அரசு.