தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள், அங்கு நகை, பணம் என எதுவும் கிடைக்கதால் கோபத்தில் வீட்டையே தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இது அப்பகுதியில் 2வது சம்பவம் என்பதால் பொதுமக்கள் பெரும் கொந்தளிப்புடன் உள்ளனர். கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டாவது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சக்திவேல் திருப்பூரில் உள்ள மூத்த மகன் வீட்டுக்கு மனைவியுடன் சென்றிருந்தார்.
இந்நிலையில் நளளிரவில் சக்திவேல் வீட்டு காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். ஆனால் அங்கு பணம் மற்றும் நகை என எதுவும் சிக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் வெளியே நிறுத்தியிருந்த இரண்டு பைக்குகளில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து வீட்டுக்குள் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.
தீ வேகமாக வீடு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. வீட்டுக்குள் இருந்து புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கொளுத்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர்.
இதில் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
கொள்ளையர்களின் இந்த யுக்தியால் பொதுமக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் செல்லவே அச்சப்படுகின்றனர். இதுபோல நடப்பது இப்பகுதியில்
இது இரண்டாவது முறையாகும் என்பதால் மக்கள் கோபத்துடன் உள்ளனர். காவல்துறை இந்த கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.