குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் தான், அவரை வைத்துத் தான் மக்கள் காங்கிரஸை திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். எனவே அவரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக
நியமிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது பெரும் போட்டியாக மாறியுள்ளது. பல சீனியர் தலைவர்கள் முட்டி மோதி வருகின்றனர்.
ஆனால் நடிகை குஷ்பு மறுபக்கம் சத்தம் போடாமல் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார். அவருக்கு பகிரங்கமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், வசந்தகுமார் என பலர்
போட்டியில் இருந்தாலும் கூட, குஷ்பு குறித்து பகிரங்கமாக இளங்கோவன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குஷ்பு நட்சத்திர அந்தஸ்து கொண்டவர். அவரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கலாம்.
தமாகா பிரிந்து சென்றபோது குஷ்புவை காங்கிரஸுக்கு வந்தார். அவரை வைத்து பல பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் நடந்துள்ளன. மக்கள் பெருமளவில் கூடினர்.
குஷ்பு வந்ததால்தான் தமிழக காங்கிரஸை மக்கள் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். எனவே அவரை தலைவராக்குவதில் தவறில்லை என்று கூறியுள்ளார் இளங்கோவன்