நேரடியான விளையாட்டு அனுபவத்தை தரும் போக்கேமான் கோ வீடியோ கேம் விளையாட்டு உலக அளவில் பிரபலமடைந் திருப்பதுடன், கேம் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், போக்கேமான் விளையாட்டால் விபரீதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் அலபாமாவிலுள்ள ஆபர்ன் பகுதியில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் போக்கேமான் கோ வீடியோ கேம் விளையாடி படி, காரை ஓட்டிச் சென்றிருக்கிறார்.
அப்போது, கவனக் குறைவு ஏற்பட்டதால், கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார். ஆனாலும், அவரது காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இது குறித்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, போக்கேமான் கோ வீடியோ கேம் விளையாடியபடி காரை ஓட்டியதால், விபத்தில் சிக்கி விட்டதாக ஒப்புக் கொண்டார்.
இதே போன்று, ஆடி கார் ஒன்றை ஓட்டிச் சென்றவரும் போக்கேமான் கோ வீடியோ கேமை விளையாடிபடி, காரை ஓட்டியதால் விபத்தில் சிக்கியிருக்கிறார்.
இதனால், போக்கேமான் கோ வீடியோ கேம் கார் ஓட்டுனர்களுக்கு மிகவும் அபாயகரமானதாக அமையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.