பொது இடத்தில் போலீசார் நடந்து கொண்ட விதம் !

திருவண்ணாமலை செங்கத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட குடும்பத்தைச் சென்னை அழைத்து வந்து, 3 பேருக்கும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் உயர் சிகிச்சை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
பொது இடத்தில் போலீசார் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா,38 ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி உஷா,32. இவர்களின் மகன் சூர்யா,

திங்கட் கிழமையன்று 3 பேரும் செங்கம்-போளூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் விடுதி எதிரே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

நகை வாங்குவது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் திட்டியதாகவும், இதில் கோபமடைந்த ராஜா, மனைவி உஷாவை அடித்தாகவும் தெரிகிறது.

அப்போது செங்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் சண்டைக்கான காரணத்தை கேட்டு விலக்கி விட முயன்றுள்ளார். 

அப்போது இது தங்கள் குடும்ப பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று ராஜா கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது போலீஸ்காரர்கள் ராஜாவையும், அவரது மனைவி மற்றும் மகனையும் லத்தியால் சரமாரியாக தாக்கினர். 

இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலானது. இந்த தாக்குதலைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குடும்பத்தினரை நடுரோட்டில் விரட்டி விரட்டி தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், 

போலீஸ்காரர்கள் நம்மாழ்வார், விஜயகுமார் ஆகியோரை வேலூர் ஆயுதப் படைக்கு அதிரடியாக மாற்றம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்சந்திரன் உத்தர விட்டார்.

எனினும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப் பட்டவர்கள் வலியுறுத்தினர். 

இந்நிலையில், தனது குடும்பத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஓட்டுநர் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.

அவர் சார்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த மனு, அவசர வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். 

இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நிதிபதிகள், ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினர் 3 பேருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டனர். பொது இடத்தில் போலீசார் நடந்து கொண்டதை ஏற்க முடியாது.

போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஒவ்வொரு கட்டமாக முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

பாதிக்கப் பட்டவர்களின் உடல் நலன், உயர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், சென்னை மருத்துவ மனைக்கு மாற்றியது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறினர். 

இந்த வழக்கை 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில், ஆர்.டி.ஓ. அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
Tags:
Privacy and cookie settings