தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்... தபால் நிலையம் | Tirupati Laddu each day, Ganga Tirth in Post office !

இந்தியாவில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில், கங்கா தீர்த்தத்தை வழங்கும் வேலைகள் தொடங்கப் பட்டு விட்டன.' ரிஷிகேஷ் மற்றும் கங்கோத்ரி 
ஆகிய இடங்களில் இருந்து கங்கை நதியின் தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது' என பெருமைப் படுகின்றனர் தபால் துறை அதிகாரிகள். 

அதே சமயம் ' தபால் வேலையைத் தவிர, பல சரக்குக் கடைகளாகவும் தபால் நிலையங்கள் மாறுகின்றன' என ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பும் நிலவுகிறது.

பீகார் தலைநகர் பாட்னாவில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட புனித கங்கா தீர்த்தத்தின் முதல் விற்பனையை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்திருக்கிறார்.

இதன் மூலம் 200 மில்லி லிட்டர், 500 மில்லி லிட்டர் பாட்டில்களில் கங்கை தீர்த்தத்தை அடைத்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் விற்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

200 மில்லி பாட்டில் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை, தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் விற்பனைத் தொடங்கி உள்ளது.

சென்னைக் கோட்ட தபால் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், " நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களுக்கு கங்கை நீர் பாட்டில்களை அனுப்பும் பணியில் உத்தரகாண்ட் மாநில தபால் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

ரிஷிகேஷில் இருந்து வரும் கங்கை நீர் 200 மில்லி 15 ரூபாய்க்கும், 500 மில்லி பாட்டில் 22 ரூபாய்க்கும் விற்கப்படும். அதுவே, கங்கோத்திரியில் இருந்து வரும் கங்கை தீர்த்தத்தின் விலை 25 மற்றும் 35 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் ஒரு வாரத்திற்குள் கங்கை தீர்த்தம் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனப் பேசியிருக்கிறார்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் துரைப்பாண்டியனிடம் பேசினோம். " தபால் வேலையைத் தவிர, அனைத்து வேலைகளையும் செய்வதற்கு ஊழியர்கள் நிர்பந்தப் படுத்தப் படுகிறார்கள். 

நமது நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் முழுமையான தபால் சேவை இன்று வரையில் சென்று சேரவில்லை. தபால் சட்டத்தின்படி, சட்டம் கொண்டு வராமலேயே, தனியார் கூரியர் சர்வீஸ் நடத்துவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள்.

இதனால் அரசுக்கு வர வேண்டிய தபால்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டன. தபால்துறையில் ஏதாவது வேலை நடக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று விற்பனையைத் தொடங்கி வைக்கிறார்கள். 

நாடு முழுவதும் 2 லட்சத்து 52 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 80 சதவீத தபால் அலுவலகங்கள், கிராமத்தில் உள்ளன. இவற்றை விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல காலமாக முன்வைக்கின்றனர்.

தபால் சேவை என்பது, மிகவும் விலை குறைவான தகவல் தொடர்பு சாதனம். இதனை வலுவாக்குவதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஆறு கார்ப்பரேட் கம்பெனிகளாக தபால் துறையைப் பிரிக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. திருப்பதி லட்டு கொடுப்பது, கங்கா நீர் கொடுப்பது, 

விண்ணப்பங்களை விநியோகிப்பது என அதன் நோக்கத்திலிருந்து திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது தபால் துறை. இன்னும் பல சரக்குக் கடையை மட்டும்தான், தபால் நிலையங்களில் திறக்கவில்லை.

உண்மையான கங்கை தண்ணியைக் கொடுக்கிறார்களா எனத் தெரியவில்லை. கிராமப்புற அஞ்சலகர்கள் என்ற பெயரில் நிரந்தரப் பணியில் அல்லாத, தற்காலிக ஊழியர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வருகின்றனர். 

இவர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. திருப்பதி லட்டும் கங்கா தண்ணியும் தபால் சேவைகளா? தனியாரிடம் தபால் துறையை ஒப்படைக்கும் முயற்சியாகத்தான், 

இது போன்ற சித்து வேலைகளை மத்திய அரசு செய்கிறது" என்றார் கொந்தளிப்போடு. நாமும் அதையேதான் கேட்கிறோம். திருப்பதி லட்டும் கங்கா தீர்த்தமும் தபால் சேவைகளா?
Tags:
Privacy and cookie settings