பாதசாரிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சென்னையில் வைக்கப் பட்டிருந்த கபாலி பட பிரம்மாண்ட பேனர்களை அகற்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீசானது ரஜினியின் கபாலி படம். ரிலீசுக்கு முன்பே பல சாதனைகளை புரிந்த இப்படம், உலகம் முழுவதும் நல்ல வசூலைத் தந்து வருகிறது.
கபாலி ரிலீசை ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்ட பேனர்கள் வைத்துக் கொண்டாடினர்.
அந்த வகையில் சென்னை திருவான்மியூர் எல்.பி., சாலையில், தனியார் திரையரங்கம் முன்பாக வைக்கப் பட்டிருந்த
பிரம்மாண்ட கபாலி பட பேனர்கள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனவே அவற்றை உடனே அகற்றும்படி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அவற்றை அகற்ற போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, நேற்று காலை சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு வந்த டிராபிக் ராமசாமி, அதிரடியாக கபாலி பட பேனர்களை கிழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனைக் கண்டு ரஜினி ரசிகர்கள் ஆவேசமடைந்தனர்.
இது தொடர்பாக டிராபிக் ராமசாமியிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
அதற்குள்ளாக இது குறித்து தகவல் அறிந்த திருவான்மியூர் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அங்கிருந்த பிரம்மாண்ட பேனர்களை அவர்கள் அகற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.