யாகூ நிறுவனதை வெரைஸான் கம்யூனிகேஷன்ஸ் வாங்குவதாக அறிவித்திருக்கிறது. 483 கோடி டாலர் கொடுத்து யாகூவை வாங்குகிறது வெரைஸான்.
யாகூ நிறுவனத்தை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில் இதில் வெரைஸான் வெற்றி பெற்றுள்ளது.
டாட்காம் குமிழுக்கு (Dotcom Bubble) முன்பு இந்த நிறுவனத்தின் மதிப்பு 10,000 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த இணைப்பில் யாகூ நிறுவனம், சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான
அலிபாபாவில் வைத்துள்ள 15 சதவீத பங்கு மற்றும் யாகூ ஜப்பான் நிறுவனத்தில் உள்ள 35.5 சதவீத பங்கு போன்றவற்றைத் தவிர்த்து இந்த இணைப்பு நடக்கிறது.
இந்த இரண்டு நிறுவனப் பங்குகளின் மதிப்பு 4,000 கோடி டாலர் இருக்கும் என கணிக்கப் பட்டிருக்கிறது. அடுத்த வருடம் முதல் காலாண்டில் இந்த இணைப்பு முழுமையடையும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இணையதள நிறுவனங்களின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான யாகூவின் முடிவு இப்படியாகும் என்பது யாரும் எதிர் பார்க்காதது.
கடந்த 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,400 கோடி டாலர் கொடுத்து வாங்க முன் வந்தது. ஆனால் யாகூ மறுத்து விட்டது.
அதேபோல பேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களை வாங்கும் முயற்சியை ஒரு காலத்தில் மேற்கொண்ட யாகூ நிறுவனம் தற்போது சந்தை வாய்ப்பை இழந்து வெரைஸான் நிறுவனம் வாங்கும் அளவுக்கு சுருங்கி விட்டது குறிப்பிடத் தக்கது.