காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவரின் மகன், மும்பையில் 23 அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு சொகுசு வீட்டை ரூ.100 கோடிக்கு வாங்கி உள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் மந்தமாக உள்ள நிலையில், சமீப காலத்தில் அதிக தொகைக்கு கைமாறிய சொத்துகளில் ஒன்றாக இது விளங்குகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் பிஹார் மாநில முன்னாள் ஆளுநருமான டிஓய் பாட்டீலின் மகன் அஜீங்க்யா பாட்டீல். இவரும் ராஜேஷ் ராவ்ரானேவும் இயக்குநர்களாக உள்ள ஏஐபிஎஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் ஒரு சொகுசு வீடு வாங்கப்பட்டுள்ளது.
மும்பையின் வொர்லி பகுதி யில் கடல் பகுதியை பார்த்தபடி அமைந்துள்ள ‘சில்வரின் டெரஸ்’ என்ற 23 மாடி கட் டிடத்தின் 21-வது மாடியின் ஒரு பகுதி மற்றும் 22, 23 ஆகிய தளங்களில் இந்த வீடு அமைந்துள்ளது.
அதிநவீன வசதிகள் கொண்ட இந்த வீட்டை ரூ.95.4 கோடிக்கு வாங்கியதாகவும் இதற்கு முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.4.7 கோடி செலுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக பாட்டீலை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் பதில் அளிக்கவில்லை. எனினும், இந்தத் தகவலை ஏஐபிஎஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் திலிப் கவத் உறுதிப்படுத்தி உள்ளார்.