மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் தாஜ் ஓட்டலில் இருந்து, 157 பேரை தனது ராணுவ அனுபவ உபாயங்களால் பாதுகாப்பாக வெளியேற்றிய கேப்டன் ரவி தார்ணிகாவின் சேவை
அப்போது வெளியில் பேசப்படவில்லை, ஆனால் புத்தக பதிவுகளில் இருந்து இப்போது முன் வைக்கப் படுகிறது.
மும்பை தாக்குதல்
நவம்பர் 26, 2008 ல் இந்திய இறையாண்மை மீது இடி இறங்கியது என்றே சொல்லலாம்.
நாட்டின் நிதி மூலதன நகரமான மும்பையில், கடல்வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலில் இருந்து நகரத்தையும் மக்களையும் காப்பாற்ற, பல வீரர்கள் தன் உயிரைப் பொருட்படுத்தாத நிஜ ஹீரோக்களாக செயல் பட்டனர்.
அதில் சிலர் தங்கள் இன்னுயிரையும் இறுதியில் இழந்துள்ளனர்.
அந்த வரிசையில் தன் உயிரையும் இழக்காமல், தன் உறவினர்கள் உட்பட அங்கிருந்த மக்களை மீட்டது, ஒரு கெடுபிடி கால சாதனையாக பேசப்படுகிறது.
யார் இந்த ரவி தார்ணிதர்கா
மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது, தார்ணிதர்கா அமெரிக்க கடற்படை கேப்டனாக இருந்தார்.
அப்போது அவருக்கு 31 வயது. ஈராக் போரில் பறக்கும் படைப்பிரிவில் 4 ஆண்டுகாலம் பயிற்சி பெற்றிருந்தார்.
2004 ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பரில் பல்லுஜாவில் நடந்த கடும் போரிலும் ரத்தம் தோய்ந்த பங்களிப்பு செய்தவர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு விடுமுறையில் நவம்பர் 2008 ல் இந்தியாவிற்கு வந்திருந்தார்.
ஆபத்பாந்தவனாக வந்த கேப்டன்
ரவி தார்ணிதர்கா, அப்போது பாத்கார் பூங்கா மற்றும் கஃப் பரேட் சந்தைக்கும் அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
அவருடைய மாமா மற்றும் உறவின சகோதரரும் நவம்பர் 26 அன்று, இரவு உணவுக்காக தாஜ்மஹால் பேலஸின் 20 வது தளத்தில் உள்ள,
லெபனீஸ் உணவு விடுதியான சூக்(Souk)குக்கு செல்ல முடிவெடுத்திருந்தனர், அப்படியே சென்றனர்.
சம்பவத்தின்போது, சுமார் 68 மணிநேரம் வெளியில் வரும் சூழலின்றி தாஜ் ஓட்டலில் கேப்டன் ரவி, பத்திரிகையாளர்கள் கேத்தி ஸ்காட் கிளார்க், அட்ரியன் லெவி உட்பட 157 பேர் உள்ளேயே இருந்தனர்.
கேப்டன் ஓட்டல் உள்ளே வந்ததிலிருந்தே அமைதியின்றி காணப்பட்டார். அதனால் சிலரோடு போனில் தொடர்பு கொண்டும் பேசிக்கொண்டிருந்தார்.
காட்டிக்கொடுத்த மெட்டல் டிடெக்டர்
கேப்டன் உள்ளே வந்தபோது நுழைவாயிலில் இருந்த மெட்டல் டிடெக்டர் ’பீப்’ ஓசை எழுப்பவில்லை. அதனால், வந்ததிலிருந்தே அவருக்கு இருப்பு கொள்ளவில்லை.
ஏதோ திட்டமிட்ட சதியால் அது வேலை செய்யாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக நினைத்த அவர் அரை மணி நேரத்துக்குப் பிறகு, மீண்டும் சோதிக்க பரிசோதனை வாயிலை கடந்து பார்த்தார்.
’பீப்’ ஓசை செயல்பட்டது. மெட்டல் டிடெக்டர் மீண்டும் வேலைசெய்ய துவங்கி இருந்தது. இந்த இடைப்பட்ட கால இடைவெளியில், தீவிரவாதிகள் உள்ளே நுழைந்திருக்கக் கூடும் என கணித்தார்.
அவருடைய உறவினருக்கு வந்த செல்போன் செய்தி மற்றும் அழைப்பு, மற்றும் சில தகவல்களால், கொலாபாவில் தீவிரவாதிகளோடு காவலர்கள் துப்பாக்கிச் சண்டை நடத்துவதை ரவி உறுதி செய்து கொண்டார்.
ஆர்.டி.எக்ஸ். குண்டு வெடிப்பு
இருக்கும் இடத்திலே தோட்டாக்களுக்கு தப்புமாறு மறைவான பகுதிகளையும் மறைத்துக் கொள்வதற்கான பொருள்களையும் தேடிக் கொண்டனர்.
அதிகாலை 2 மணியளவில் தாஜ் ஓட்டலின் உச்சி மண்டபத்தின் மையப் பகுதிக்கு கீழே, 10 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ் குண்டை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர்.
அந்த தீ பரவக்கூடும் என்பதாலும் எதிரிகள் 20 வது தளத்திற்குள் வரக்கூடும் என்பதாலும் அங்கிருந்த பாதுகாவலர்
மற்றும் தனது நண்பர்களான முன்னாள் தென்னாப்பிரிக்க தனியார் நிறுவன 6 கமாண்டோக்களையும் சேர்த்துக் கொண்டு, அங்கிருந்த மக்களுக்கு பாதுகாப்பளிக்க பிரச்சினையை தன் கையில் எடுத்துக் கொண்டார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தீவிரவாதிகள் உள்ளே வந்தாலும் நாம் எதிர்ப்போம் என எதிர்பார்க்க மாட்டார்கள்.
அதனால், ஆயுதம் இருப்பது பாதுகாப்பு என, சமயலறையில் இருந்த கத்தி, கட்டைகள் உட்பட்ட ஆயுதங்களை கையில் எடுத்துக் கொள்ளவும் துணிகளுக்குள் மறைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார்.
வெளியேறுவதற்கான பாதை தடையில்லாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார். காவல் துறையினர் கீழே வந்து விட்டனர். நிலைமை சரியாகி விட்டது என்ற வதந்திகளும் வந்தன.
ஆனாலும், கேப்டன் ரவி நம்பவில்லை. சண்டை நடப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் அது சாத்தியமில்லை என்று தன் முன்னெச்சரிக்கைகளை கைவிடாதிருந்தார்.
சூக்கில் இருந்த அனைவருக்கும் இரண்டு கமாண்டோ தென்னாப்பிரிக்கர்கள் சூழ்நிலையை விளக்கினர்.
அங்குள்ள மாநாட்டு மண்டபத்தில் 100 கொரியர்கள் இருந்தது, குழப்பத்தை கொடுத்தது. அங்கு மேலும் 50 பேர் தங்கிக் கொள்ளலாம் என்பதால், அங்கும் சிலர் நகர்ந்தனர்.
அங்கு வலிமையான தடித்த மரக்கதவுகள் போடப் பட்டிருந்தது. அது பயங்கரவாதிகள் தாக்கினாலும் பாதுகாத்துக் கொள்ள தோதாக கருதப்பட்டது.
தளத்தின் வெளிப்பக்கத்திலிருந்தும் பயங்கரவாதிகள் புகுந்து விடாமல் வழிகள் அடைக்கப்பட்டன.
திரைச்சீலைகள், ஜன்னல்களுக்கு முன்பிருக்கும் கம்பிக் கதவுகளும் மூடப்பட்டன. விளக்குகளும் மங்கிய ஒளி செய்யப்பட்டது.
மறைந்திருக்கும்போது, ஓசை எழாதிருக்க செல்போன்களில் சப்தமாக பேசாதிருக்க அறிவுறுத்தப்பட்டது.
பாதுகாப்புடன் வெளியேற்றம்
அங்கிருந்த பாதுகாவலர்களின் ஆயுதங்களை பெற்றுக் கொண்டு, அவர்கள் உட்பட தெனாப்பிரிக்க கமாண்டோக்கள் சிலரும் முன் செல்ல,
அதன் பிறகு, 157 பேரும் தொடர பக்கவாட்டிலும் பின்புறமுமாக துப்பாக்கி பாதுகாப்புடன் நகர்ந்தனர்.
ஒவ்வொரு தளத்திலும் தீப்பற்றினால் வெளியேறும் கண்ணாடி கதவுகளுடைய அவசரகால வழிகளும் இருந்தன.
6 வது தளத்திலும் தீப்பற்றி எரிந்தது. இப்படி ஒவ்வொரு தளத்தையும் எச்சரிக்கையாக கடந்து ஒவ்வொருவராக பத்திரமாக தரையிறக்கப் படனர்.
அன்று தாஜ் ஓட்டலில் இருந்தவர்கள் எல்லாருமே தாக்குதல் நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தெரிந்தவர்கள் அல்ல. பலருக்கு அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்புகளை கூட பயன்படுத்தி கொள்ள தெரியாது.
ஆபத்துக்குள்ளே அமைந்த ஒரு அடைக்கல ஜீவனாக, ரவி இல்லாவிட்டால், அங்கிருந்தவர்கள் பாதுகாத்துக் கொள்வதாக நினைத்து, அங்கு மிங்குமாக ஓடி பலியாகிருப்பார்கள் என்பது உண்மை தானே!
இந்த ஆபத்பாந்தவனுக்கு நன்றி சொல்வது நன்மை தானே!