தமிழகத்திலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ரூ.20 கோடியில் ஒருங்கிணைந்த நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகம் 21 நவீன அரிசி ஆலைகளை நடத்துகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் டன் நெல் அரவை செய்யப் படுகிறது.
422 தனியார் ஆலைகள் மூலம் 14 லட்சம் டன் நெல் அரவை செய்யப் படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் அரிசி தேவையை கருத்தில் கொண்டு, கூடுதல் நவீன அரிசி ஆலைகள் அமைப்பது அவசியமாகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் நெல் அறுவடை காலங்களில் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 64 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இது 20 கி.மீ. தொலைவில் உள்ள சுந்தரக்கோட்டை அரிசி ஆலையிலும், திருவாரூர் மண்டல அரவை முகவர்களின் அரிசி ஆலைகளிலும் அரவை செய்யப் படுகிறது.
இதனால், அரிசியை உற்பத்தி செய்து பொது விநி யோகத் திட்டத்துக்கு வழங்குவதில் தாமதமும், போக்குவரத்து செலவும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, தமிழகத்திலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ரூ.20 கோடியில் ஒருங்கிணைந்த நவீன அரிசி ஆலை அமைக்கப்படும்.
இந்த ஆலை ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் நெல் அரவைத் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஆலையில் கிடைக்கும் தவிடு, உமி போன்றவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.