தஞ்சையில், மூன்று லட்சம் ரூபாய் கடனுக்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரித்ததால், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
தஞ்சாவூர், பர்மா காலனியைச் சேர்ந்தவர் ராஜா; கொத்தனார். இவரது மனைவி மீனா, 34; நான்கு குழந்தைகள் உள்ளன.
விபத்தில் சிக்கிய கணவர் ராஜா, கடந்த ஆண்டு விபத்தில் சிக்கியதால், மருத்துவச் செலவிற்காக, அறிவழகன் என்பவனிடம்,
மீனா, வீட்டை அடமானம் வைத்து, இரண்டு பைசா வட்டிக்கு, மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
மாதம், 15 ஆயிரம் வீதம், 11 மாதங்களாக வட்டி மற்றும் அசலை கட்டி வந்துள்ளார். இரண்டு மாதங்களாக, குடும்ப சூழல் காரணமாக, பணம் கட்ட தவறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், மீனா குடும்பத்துடன் திருச்சிக்கு சென்று விட்டு, மாலை வீட்டுக்கு வந்த போது,
தன் வீட்டின் பொருட்கள் வெளியே வீசப்பட்டு இருப்பதையும், வீடு பூட்டப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விசாரித்த போது, அறிவழகன் மற்றும் அவனது நண்பர்கள் பொருட்களை வெளியே வீசி, வீட்டுக்கு மேல் பூட்டு போட்டு சென்றது தெரிய வந்தது.
தஞ்சை தாலுகா போலீசில் மீனா புகார் செய்தார். அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றார்.
அங்கும் புகாரை வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அறிவழகன் அதிக வட்டி கேட்டு மிரட்டியுள்ளான்.
இதனால், வேதனை அடைந்த மீனா, நேற்று முன்தினம் மாலை, வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கந்து வட்டி மிரட்டல் : மீனா கூறுகையில், ''மூன்று லட்சம் ரூபாய் கடனுக்கு, 11 மாதங்கள், ஒரு லட்சத்து, 65 ரூபாய் வரை கட்டி உள்ளேன். இரண்டு மாதங்களாக கட்ட முடியவில்லை.
பணம் கொடுத்த அறிவழகன் கந்து வட்டி கேட்டு, தினமும், 3,000 ரூபாய் கட்ட வேண்டும் என தொல்லை கொடுத்தான்.
என் வீட்டை, 16 லட்சம் ரூபாயில் கட்டினோம். தற்போது இதன் மதிப்பு, 40 லட்சம் ரூபாய் இருக்கும். அந்த வீட்டை அபகரித்து கொண்டான். இவ்வாறு அவர் கூறினார்.