டில்லியை அதிர வைத்த குழந்தை கடத்தல் கும்பலை, போலீசார் கைது செய்தனர். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, சமீப காலமாகவே, அதிக அளவில் குழந்தைகள் கடத்தப் படுகின்றனர்; இதை விசாரித்து வந்த போலீசார், அந்த கும்பலை நேற்று சுற்றி வளைத்தனர்.
தம்பதியான சாயிரா பேகம், 45, ஹுசைன், 50, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உதவியாக செயல்பட்ட, மேலும் ஆறு பேரும் கைது செய்யப் பட்டனர்.
அதிர்ச்சி தகவல் :
இவர்களில், தம்பதியின் தலைமையில் குழந்தை கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: இந்த கும்பல், அண்டை நாடான நேபாளத்தில் இருந்து, பெண் குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர்.
பல பகுதிகளில், குழந்தையை கடத்தி விற்பவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தைகளை வாங்கி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதன் மூலம், 100 கோடி ரூபாய் வரையில் இந்த கும்பல் சம்பாதித்துள்ளது. இது வரை, 5,000 குழந்தைகளை கடத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கைதானவர்கள் :
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அந்த தம்பதி, 1990 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இரண்டு முறை கைதானவர்கள். போதிய ஆதாரம் இல்லாததால், இந்த வழக்குகளில் இருந்து விடுதலை ஆகி விட்டனர்.
அதன் பின்னும், தொடர்ந்து குழந்தை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.