கன்னியாகுமரி கடற்கரையில் நின்று கொண்டு ஒரு இளம் பெண் டாக்டர் தனது சித்தி கொடுமை தாங்க முடியாமல் கதறி அழுதது அங்கு வந்தோரை அதிர வைத்தது. போலீஸார் அவரை மீட்டு ஆறுதல் கூறினர்.
தான் திரும்ப வீட்டுக்குப் போக விரும்பவில்லை என்று அப்பெண் கூறி விட்டதால் அவரை எங்கு அனுப்புவது என்பது குறித்து போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நேற்று ஒரு பெண் தனியாக கடலோரமாக அமர்ந்திருந்தார். அழுதபடி இருந்த அப்பெண் திடீரென கடலுக்குள் போகத் தொடங்கினார்.
இதைப் பார்த்த அங்கு ரோந்தில் இருந்த போலீஸார் ஓடிப் போய் அவரைத் தடுத்து மீட்டனர். அவர்களிடம் அப்பெண் கதறி அழுதார். எனக்கு வாழப் பிடிக்கவில்லை. என்னை விடுங்கள் என்று கூறி கதறினார்.
இதையடுத்து அப்பெண்ணை சமாதானப்படுத்திய போலீஸார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மகளிர் போலீஸார் அப்பெண்ணை அமர வைத்து ஆறுதல் கூறி விசாரித்தனர். அப்போது அவர் தர்மபுரியயை அடுத்த தொப்பூரைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
இப்பெண்ணுக்கு தாயார் இல்லை. தந்தை 2வது திருமணம் செய்து கொண்டார். வந்த சித்தியோ, இப்பெண்ணை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
தனக்குப் பிறந்த 3 குழந்தைகள் மீது மட்டுமே பாசத்தைக் கொட்டி வந்துள்ளார். இப்பெண் ஹோமியோபதி படித்துள்ளார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
டாக்டராக வேலை பார்த்தும் கூட சித்தி தொல்லை யிலிருந்து இப்பெண்ணால் தப்ப முடியவில்லை. தினசரி சித்தி கொடுமை அதிகரித்துள்ளது.
தனது சித்தியின் தொல்லை குறித்து தந்தையிடம் கூறியும் கூட அவர் எதுவும் பேசுவதில்லையாம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
ரயில் ஏறி நாகர்கோவில் வந்த அவர் அங்கிருந்து கன்னியாகுமரி வந்துள்ளார். கடற்கரைக்கு வந்த அவருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
இதனால் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அப்போது தான் போலீஸார் அவரை மீட்டனர்.