மலேசியாவில் உள்ள பேராக்கின் சட்ட மன்ற சபாநாயகர் பதவியை அலங்கரிக்கிறார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெண் தங்கேஸ்வரி.
மலேசிய இந்தியர்களின் முதலாவது, 'பெண் சபாநாயகர்' என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக தன் வாழ்க்கையை துவங்கிய தங்கேஸ்வரி, பின்பு சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞரானார்.
பின்னர், 1976ஆம் ஆண்டில் அவர் மலேசிய இந்திய காங்கிரஸில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்தார்.
பேராக் மாநில மகளிர் அணித் தலைவியாகவும் தேசிய அளவில் துணைத் தலைவியாகவும் கட்சியில் பொறுப்புகளை வகித்தார்.
தற்போது கட்சியின் ஈப்போ தாமான் வாக்கியோங் கிளையில் மகளிர் அணித் தலைவியாக இருந்து வருகிறார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி சார்பில் கட்சி அவரை ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது.
ஆனால், அந்த தேர்தலில் பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த கேசவனிடம் அவர் தோல்வி கண்டார்.
இந்தப் பொறுப்பில் இருந்து வந்த எஸ். கே. தேவமணி பதவி விலகி யதைத் தொடர்ந்து புதிய நியமனம் இடம் பெறுகிறது.
9ம் தேதி பேராக் சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் சட்டமன்ற அவைத் தலைவருக்கான தேர்தலில் அவரை எதிர்த்து சேர்ந்த சிவக்குமார் போட்டியிட்டார்.
சிவக்குமாருக்கு 24 வாக்குகளும், தங்கேஸ்வரிக்கு 30 வாக்குகளும் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து 6 வாக்குகள் பெரும்பான்மையில் தங்கேஸ்வரி அதிகார பூர்வமாக பேராக் சட்டமன்ற அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இதன் மூலம் பேராக் மாநிலத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை தங்கேஸ்வரி பெறுகிறார்.
தனது வெற்றி குறித்து 'என் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தமது பணியைச் செவ்வனே செய்யப் போகிறேன்.
இது இந்திய சமுதாயத்திற்கு வழங்கப் பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரம். மகளிருக்குத் தரப்பட்ட அங்கீகாரம் என்கிறார் தங்கேஸ்வரி..