துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நடுவானில் குழந்தை பிறந்துள்ளது.
துபாயில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் நோக்கி கடந்த 14-ம் தேதி சிபு பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
விமானம் இந்திய வான்பகுதியை நெருங்கிய போது, விமானத்தில் பயணம் செய்த பிலிப்பைன்ஸ் நாட்டின் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக விமானத்திலேயே இரண்டு செவிலியர்கள் மற்றும் மற்றும் சக பயணிகள் உதவியுடன் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இது குறை பிரசவம் என்பதனாலும் தாயிற்கு உடனடி மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட காரணத்தினாலும் விமானம் அவசரமாக ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டது.
இதனால் 9 மணி நேரம் தாமதமாகியும் மற்ற எந்த பயணியும் இது குறித்த எந்த புகாரும் தெரிவிக்க வில்லை.
இது குறித்த நிகழ்வை சக பயணியான மிஸ்ஸி பெர்பரே என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்து பதிவிடவும் செய்துள்ளார்.