விபத்தில் மூளைச்சாவு அடைந்த நாகர்கோவில் சிறுவனின் இதயம், சென்னைக்கு தனி விமானம் மூலம் சென்றது. நாகர்கோவில், கோட்டாறை சேர்ந்தவர் சுவாமிநாதன்.
ஜவுளிக்கடை ஊழியர். இவரது மனைவி லதா, தனியார் மருத்துவமனை நர்ஸ். இவர்களது மகன் அவினாஷ், 12, கோட்டாறு அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்தான்.
கடந்த, 18ம் தேதி மாலை, அவினாஷ், டியூஷனுக்கு சைக்கிளில் சென்றபோது, பைக் மோதி படுகாயமடைந்தான்.
தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் சம்மதித்தனர்.
நேற்று முன்தினம், நெல்லை, தனியார் மருத்துவ மனைக்கு அவினாஷ் கொண்டு வரப்பட்டான்.
நேற்று காலை, 10:30 மணிக்கு ஆப்பரேஷன் துவங்கியது. சிறுவனின் இதயம் எடுக்-கப்-ப-ட்டு, மதியம், 1:50 மணிக்கு, தனி ஆம்புலன்ஸ் மூலம் துாத்துக்குடி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு, இதயத்தை பெற்று செல்ல, சிறப்பு விமானம் துாத்துக்குடியில் காத்திருந்தது. அதில், சிறுவனின் இதயத்தை அனுப்பி வைத்தனர்.
அவினாஷின் கண்கள், நெல்லை தனியார் கண் வங்கிக்கு வழங்கப்பட்டன. இரு சிறுநீரகங்கள், நெல்லை மற்றும் மதுரை தனியார் மருத்துவ-மனைகளுக்கு வழங்கப்பட்டன.
837 பேரின் உறுப்புகள் தானம் - 4,000 பேருக்கு மறுவாழ்வு
தமிழகத்தில், எட்டு ஆண்டுகளில், 837 பேரின் உடல் உறுப்புகள் தானம் மூலம், 4,677 பேர் பயன் அடைந்துள்ளனர். இதனால், 4,000க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 2008 அக்டோபரில், மூளைச்சாவு அடைந்த, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர், இதயேந்திரனின் உடல் உறுப்புகளை, அவரது பெற்றோர் தானம் செய்தனர்;
இது, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழக அரசு, உடல் உறுப்பு தான திட்டத்தை துவக்கியது.
இதுவரை, மூளைச்சாவு அடைந்த, 837 பேருடைய உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, 4,677 பேர் பயனடைந்துள்ளனர்.
இதுவரை, 837 பேரிடமிருந்து, இதயம் - 236, நுரையீரல் - 125, கல்லீரல் - 787, சிறுநீரகம் - 1,529, கணையம் - 11, கண்கள் - 1,265, இதய வால்வு - 678 உட்பட மொத்தம், 4,677 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன.
2015 - 16ல் மட்டும், அதிக பட்சமாக, 156 பேரிடம் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன.
இது குறித்து, உடல் உறுப்பு தான ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'வெளி மாநிலங்களில் இருந்தும் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப் படுகின்றன.
உடல் உறுப்புகள் தானத்தில், தமிழகம் முன்னோடியாக உள்ளது' என்றனர்.