துணை கலெக்டரின் பேஸ்புக் பதிவால் நெகிழ்ச்சி அடைந்து அவரை அழைத்து கிராமத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார் விஜய்.
சில தினங்களுக்கு முன்பு கேரளா பாலக்காட்டில் துணை கலெக்டரான உமேஷ் கேசவன் தனது ஃபேஸ்புக் பதிவில் பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் இல்லை. உங்கள் இடத்தில் கழிவறை வசதி இருக்கிறதா எனக் கேட்டால்... இந்த மலையைச் சுற்றியுள்ள இடமே எங்கள் கழிவறை என்கிறார்.
அரசாங்கத்தின் மீது அம்மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அங்கிருக்கும் சிறார், சிறுமியரில் பெரும் பாலானோருக்கு பள்ளி செல்ல விருப்பமில்லை. பள்ளிப்படிப்பால் பயனில்லை என நினைக்கிறார்கள் அவர்கள்.
தங்கள் சமூகத்தை தாண்டி என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. விவசாய வேலை இல்லா நாட்களில் டி.வி.யில் விஜய் படங்கள் பார்க்கிறோம் என்கின்றனர்.
அரசாங்கம் ஒதுக்கிய கோடிக்கணக்கான பணத்தில் எதுவும் அவர்களைச் சென்றடையவில்லை. அவர்களைச் சென்றடைந்திருக்கும் ஒரே விஷயம் 'விஜய்'" என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், அம்மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வை கொண்டு வர, விஜய்யை இங்கு அழைத்து வர அவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
துணை கலெக்டரின் இந்த பதிவால் மிகவும் நெகிழ்ச்சி யடைந்த விஜய், நேற்று (ஆகஸ்ட் 12) உமேஷ் கேசவனை அழைத்துப் பேசியிருக்கிறார்.
அப்போது அந்த கிராமம் எங்கியிருக்கிறது, மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்ட அனைத்தையுமே கேட்டு தெரிந்து கொண்டார். இருவருக்கும் இடையேயான சந்திப்பு சுமார் 1 மணி நேரம் வரை சென்றிருக்கிறது.
விஜய் இந்த ஈடுபாட்டால், பரதன் படப்பிடிப்பை முடித்து விட்டு அல்லது இடையே கிடைக்கும் நேரத்தில் அந்த கிராமத்துக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.