தோழிக்காக எம்பிபிஎஸ் சீட்டை விட்டு கொடுத்தவர் !

தன்னலமற்ற செய்கையால் மாணவி ஒருவர் மருத்துவ கலந்தாய்வுக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழச் செய்தார். 
தோழிக்காக எம்பிபிஎஸ் சீட்டை விட்டு கொடுத்தவர் !
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக நேற்று (திங்கள்கிழமை) முதல்கட்ட சிறப்பு கலந்தாய்வு நடைபெற்றது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். 

ராணுவத்தினர் வாரிசுகள் பிரிவில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த வர்ஷினி 199 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதலிடத்தில் இருந்தார். 

இரண்டாம் இடத்தில் அவரது பள்ளித் தோழி ஜனனி இருந்தார். அவர் 198.75 கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தார். முதலிடத்தில் இருந்த வர்ஷினிக்கு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இடம் கிடைத்தது. 

ஆனால், வர்ஷினி ஓசி பிரிவிலும் விண்ணப்பித்திருந்தார். 

ஓசி பிரிவினருக்கான கலந்தாய்விலும் தனக்கு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் நிச்சயமாக இடம் கிடைக்கும் என உறுதியாக இருந்ததால் வர்ஷினி தனக்கு கிடைத்த இடத்தை ஜனனிக்கு விட்டுக் கொடுத்தார்.

இது குறித்து ஜனனி கூறும்போது, "நான் 1181 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். எம்.எம்.சி.யில் படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. எனக்காக வர்ஷினி அவருக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்துள்ளார்" என்றார்.

ஜனனி - வர்ஷினியின் நட்பு குறித்து அவர்கள் படித்த சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி முதல்வர் துளசிதாசன் கூறும் போது, எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு 
இடையே ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதுமே உறுதியாக இருக்கிறோம். அதே வேளையில், சமூக சிந்தனையையும் மாணவர்கள் மத்தியில் விதைக்க மறந்ததில்லை.

தற்போது, வர்ஷினியின் செயல்பாடு மாணவர் சமுதாயம் சமுதாயத்தின் நன் மதிப்புகளை பேணுவதில் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளது" என்றார்.

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜ் கூறும் போது, பொதுவாக கலந்தாய்வுகளின் போது 

அதிக கட் ஆப் மதிப்பெண் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளிடம் தங்களுக்கு இடத்தை விட்டுத்தருமாறு சிலர் கோரிக்கை வைப்பார்கள், 

இன்னொரு பிரிவிலும் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கும் மாணவ/மாணவிகள் அவ்வாறு விட்டு தருவதும் உண்டு. இங்கே இரண்டு பேரும் நண்பர்கள் என்பதால் மிக எளிதாக சீட்டை வர்ஷினி விட்டு கொடுத்துள்ளார்" என்றார்.
Tags:
Privacy and cookie settings