மத்திய பிரதேசத்தில் வாகனம் மறுக்கப் பட்டதால் பிரசவ வலி வந்த மகளை தந்தை ஒருவர் தனது சைக்கிளில் வைத்து 6 கிலோ மீட்டர் ஓட்டிச் சென்று மருத்துவ மனையில் அனுமதித் துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபுரா கிராமத்தை சேர்ந்தவர் நன்ஹெபாய். அவரது மகள் பார்வதி நிறைமாத கர்ப்பிணி.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை பார்வதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பழங்குடியின மக்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் ஆம்புலன்ஸ் சேவை இல்லை.
ஆனால் மக்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல ஜனனி எக்ஸ்பிரஸ் என்ற வாகன சேவை உள்ளது. இந்நிலையில் நன்ஹெபாய் ஜனனி எக்ஸ்பிரஸ் கான்டிராக்டரை அணுகினார்.
அவரோ வாகன சேவையை எல்லாம் நிறுத்தி விட்டோம் என்று கூறி பார்வதியை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல மறுத்து விட்டார்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் நன்ஹெபாய் வலியால் துடித்த தனது மகளை சைக்கிளில் வைத்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்தார்.
அங்கு பார்வதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. முன்னதாக ஒடிஷாவில் வாகனம் மறுக்கப் பட்டதால் ஒருவர் தனது மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் நடந்து சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.