!தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தேர்ந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புதிதாக தோல் வங்கி தொடங்கப்படுகிறது. தோல் வங்கியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்..
தென்னிந்தியாவில் தீக்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முன்னிலை மருத்துவமனையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விளங்குகிறது.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தீக்காய சிகிச்சைக்காக இங்கு ஆண்டுக்கு சராசரியாக மூன்றாயிரம் பேர் வருகிறார்கள். இங்கு சிறிய தீக்காயம் முதல் பெரிய தீக்காயம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இருப்பினும் பெரிய தீக்காயமடைந்தவர்களில் பலரை காப்பாற்றுவது சிரமமாக இருக்கிறது. அவர்களை காப்பாற்றுவதற்கு உதவும் வகையில் இங்கு தோல் வங்கியை தொடங்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
ஒருவர் மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடலின் இருந்து பெறப்படும் உறுப்புகளை தலா ஒரு பயனாளிக்கு தான் பொருத்த முடியும்.
ஆனால், மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்படும் தோலை பலருக்கு பொருத்தி உயிரைக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் டாக்டர்கள்.
உடல் உறுப்பு தானம் தொடர்பாக விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது. இருப்பினும், தோலைக்கூட தானமாகக் கொடுக்கலாம் என்ற விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறிய மற்றும் நடுத்தர தீக்காயம் அடைவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கு மேல் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.