இணையத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இளைஞர் கைதான நிலையில், சிறையில் கொடூரமாக தாக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர், 31 வயதாகும், ஹமீது அன்சாரி. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு இணையத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணைக் காணும் ஆவலில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து
சட்ட விரோதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததற்காக அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள அன்சாரியை அங்கிருக்கும் சக கைதிகள் கடந்த 2 மாதங்களில் இரு முறை சரமாரியாக தாக்கியதாகவும்,
அதன் காரணமாக பலத்த காயமடைந் திருப்பதாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் மரண தண்டனை கைதியுடன் அன்சாரி அடைக்கப் பட்டிருப்பதாகவும் அன்சாரியின் பாதுகாப்பு கேள்வி குறியாகி யுள்ளாதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அங்குள்ள பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த, சிறை கண்காணிப்பாளர் ரெஹ்மான்,
சிறையில் நடந்த தாக்குதல் சம்பவம் உண்மையே என்றும், சிறைகளில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மரண தண்டனை கைதிகளுக்கான பகுதியில் அன்சாரி அடைக்கப் பட்டிருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காகவே எனவும் தெரிவித்தார்.
மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காது என்று சிறைக் கண்காணிப்பாளர் எழுத்து மூலம் உறுதி அளிக்க வேண்டும் என்று
அன்சாரியின் வழக்கறிஞர், விடுத்த கோரிக்கை தொடர்பாக கேட்டதற்கு அது சாத்தியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தங்களது மகனை பாகிஸ்தான் சிறையில் இருந்து மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என
ஹமீது அன்சாரியின் குடும்பத்தினர் இந்திய வெளி விவகாரத் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.