ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் கவனம் முழுவதையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் சாக்ஷி மாலிக்.
முந்தைய ஆண்டுகளை விட அதிக வீரர்களுடன் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்றுள்ளது. ஆனால், போட்டிகள் தொடங்கி பத்து தினங்களுக்கு மேலாகியும், பதக்கப் பட்டியலில் நுழைய முடியாமல் இந்தியா திணறி வந்தது.
இந்நிலையில் சாக்ஷியின் இந்த வெற்றி மூலம் முதல் பதக்கத்தைப் பெற்று பதக்கப் பட்டியலில் நுழைந்துள்ளது இந்தியா. இதனால் இந்தியா முழுவதும் இருந்து சாக்ஷிக்கு வாழ்த்துக்களும்,
பாராட்டுகளும் குவிந்தவண்ணம் உள்ளன. இப்படி ஒரே நாளில் மொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சாக்ஷி பற்றிய விபரங்கள்.
ஹரியானாவைச் சேர்ந்த பெண் மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக். 23 வயதான சாக்ஷி, ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார் இவர்.
இந்த வெற்றியின் மூலம் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்கு 5வது பதக்கம் வாங்கிக் கொடுத்துள்ளார் சாக்ஷி. ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் 4வது இந்தியப் பெண் என்ற பெருமையும் சாக்ஷிக்கு கிடைத்துள்ளது.
1992ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி ஹரியானா ரோடாக்கில் பிறந்தவர் சாக்ஷி மாலிக். 5 அடி 3 இன்ச் உயரமுள்ள சாக்ஷி, 2002ம் ஆண்டு மல்யுத்தத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார்
இந்தாண்டு துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றார் இவர். ஒலிம்பிக்கில் இவர் விளையாடுவது இதுவே முதல்முறை ஆகும்.
முதல் முறை பங்கேற்பிலேயே பதக்கம் வாங்கி பாராட்டுகளைப் பெற்று வருகிறார் சாக்ஷி. கடந்த 2014ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றவர் சாக்ஷி.
இதே போல் ஆசிய விளையாட்டுப் போட்டி 2014ல் வெண்கலமும், டோஹாவில் நடைபெற்ற ஆசியன் சேம்பியன்ஷிப் 2015ல் வெண்கலமும் வென்றுள்ளார்.