'பெற்றால்தான் தெரியும் பிரசவ வலி’ என்று கூறுவார்கள். மனைவி பிரசவ அறையில் இருக்கும் போது கணவன்மார்கள் என்ன செய்வார்கள்? திரையில் காண்பிப்பது போல அறைக்கு வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பார்கள்.
அதிகபட்சமாக... பிரசவ அறைக்குள் அனுமதிக்கப்பட்டால் மனைவியின் கையை ஆறுதலாக பற்றிக் கொள்வார்கள். ஆனால், மனைவியின் பிரசவ வேதனையை அனுபவிக்க எத்தனை பேர் முன் வருவார்கள்?
நியூயார்க்கைச் சேர்ந்த ‘பென்’ என்ற இளைஞர் தன்னால் முடியும் என்று நிரூபித்துள்ளார். நியூயார்க்கில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வரும் பென்கிம் தம்பதிக்கு லோலா
மற்றும் பென் சார்லஸ் என இரு குழந்தைகள். தன் மனைவி மீது உள்ள அக்கறையை குழந்தைகளுக்கு வெளிப்படுத்த நினைத்த பென், பிரசவ வலியை அனுபவிக்க தயாரானார்.
ஒரு பெண் அனுபவிக்கும் பிரசவ வலியை முழுவதுமாக அனுபவத்தில் அறிந்து கொள்ள முடிவெடுத்த பென், டாக்டர் சாமெடோமாவிடம் சென்றார்.
நிஜத்தில் ஒரு பெண்ணுக்கு பிரசவ அறையில் என்னென்ன செய்யப்படுமோ, அது போன்ற ஏற்பாடுகள் பெண்ணுக்கும் செய்யப்பட்டன.
அவரை படுக்க வைத்து, எலெக்ட்ரோலெட்களை அடிவயிற்றுத் தசைகளில் பொருத்தினார் மருத்துவர். எலக்ட்ரானிக் ஸ்டிமுலேட்டரை இணைத்து அதன் மூலம் மின் அதிர்வுகளை தசைகளில் செலுத்தி வலி தூண்டப்பட்டது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிரசவ வலியைப் போலவே 1 முதல் 10 வரையான நிலைகளில் படிப்படியாக வலியை அதிகரிக்கச் செய்தார். சிறிது நேரத்தில் உச்சபட்ச வலியை தாங்க முடியாத பென் அலற ஆரம்பித்தார்.
‘பெண்கள் அனுபவிக்கும் வலியில் மூன்றில் ஒரு பங்கு வரை மட்டுமே என்னால் தாங்க முடிந்தது’ என பென் தன் பிரசவ வலியின் அனுபவத்தை விவரித்தார்.
‘கணவர் அனுபவிக்கும் பிரசவ வலியைப் பார்த்து ரசித்துச் சிரிக்கும் மனைவி கிம்’ என்கிற வீடியோ உலகம் முழுவதும் வைரலாகப் பரவி இருக்கிறது.
‘அந்தக் கருவியை கொண்டு வாங்கப்பா... இங்குள்ள கணவர்களுக்கும் பொருத்தி வேடிக்கை பார்க்கலாம்’ என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது... நன்றி குங்குமம் தோழி.