கோவை மதுக்கரை அருகே ரயில் மோதி யானை பலியான இடங்களில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
கடந்த மாதம் மதுக்கரை முதல் புதுப்பாதை வரை வனத்தை ஒட்டியுள்ள ரயில் பாதையை கடந்த போது 3 யானைகள் ரயிலில் அடிப்பட்டு இறந்தன. யானைகள் இறப்பை தடுக்கவும்,
அவற்றை பாதுகாப்பது குறித்து ரயில்வே மற்றும், தமிழக - கேரள வனத்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை அப்பகுதியில் கூட்டாக ஆய்வு செய்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட முடிவின் படி தண்டவாளத்தை யானைகள் கடக்கும் 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த இடங்கள் மோஷன் டிராக்கிங் கேமராக்கள் முதல்கட்டமாக பொருத்தப் பட்டுள்ளன.
இதன் மூலம் யானை மற்றும் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். கேமராக்கள் மூலம் பதிவாகும் படங்களை இருமாநில வனத்துறையினரும் அதிகாரிகளும் ஆய்வு செய்வார்கள்.
இதன் அடிப்படையில் யானைகள் உயிரிழப்பை தடுக்க படிப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது வனத்துறையின் கருத்து.