வலங்கைமான் அருகே உள்ள அரவூர் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவனை, அவனது பெற்றோர் ராமநாதபுரம் மாவட்டம் ஆண்டிக்கோளம்
சிக்கல் கிராமத்தை சேர்ந்த பொன்னையன் என்பவரிடம் ரூ.70 ஆயிரத்துக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்ட சைல்டு லைன் அமைப்பிற்கு அந்த சிறுவன் அடகு வைக்கப்பட்டது தொடர்பாக தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அரவூர் கிராம நிர்வாக அதிகாரி சத்யா, வருவாய் அலுவலர் தீபா, கொத்தடிமை குழந்தைகள் மீட்பு குழு உறுப்பினர்கள் பிரகலாதன், ரமேஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பொன்னையன், அந்த சிறுவனை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு அனுப்பி வைத்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கொத்தடிமை குழந்தைகள் மீட்பு குழுவினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சிறுவன், அரவூர் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சிறுவனை மீட்டு, வலங்கைமான் தாசில்தார் சொக்கநாதனிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் பொன்னையன் மீது வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் குழந்தை மீட்பு குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
மகனை அடகு வைத்த பெற்றோருக்கு தாசில்தார் மற்றும் மீட்பு குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர்.