மாநகராட்சி அதிகாரி போல் நடித்து 45 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆழ்வார் திருநகர் விரிவு, லட்சுமி நகரை சேர்ந்தவர் குமாரதேவன் (82). தனது மனைவியுடன் வசித்து வருகிறார். குழந்தைகள் இல்லாததால் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 11ம் தேதி குமாரதேவன் வீட்டிற்கு வந்த இருவர், தங்களை மாநகராட்சி அதிகாரி என்று கூறி, வீட்டு வரி முறையாக செலுத்துகிறீர்களா, அப்படி செலுத்தி இருந்தால் அதற்கான ரசீதை காண்பிக்க வேண்டும், என கூறினார்.
உடனே, பீரோவில் இருந்த ரசீதை காண்பித்துள்ளனர். பின்னர், உயர் அதிகாரியிடம் பேச வேண்டும் என கூறி ஒருவர் செல்போனில் பேசுவது போல் நடித்தார்.
பின்னர் இருவரும் சென்று விட்டனர். இரண்டு நாட்கள் கழித்து குமாரதேவன் பீரோவை சோதனை செய்தபோது அதில் இருந்த 45 சவரன் நகை மாயமானது தெரியவந்தது.
உடனே இது குறித்து குமாரதேவன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, இருவர் பைக்கில் வந்தது தெரிய வந்தது.
அந்த புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.இதற்கிடையில் கடந்த 16ம் தேதி விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த நபரை மடக்கிய போது குமாரதேவன் வீட்டில் கொள்ளையடித்த நபரின் புகைப்படத்துடன் உருவம் ஒத்து போனது.
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது குமாரதேவன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.
பிடிப்பட்ட நபர் வேலூர் மாவட்டம் சுத்திப்பட்டை சேர்ந்த கணேஷ் (38) என்பது தெரியவந்தது.
இவர் தனது நண்பர் காந்திராஜன் மற்றும் அவரது மனைவி மல்லிகா உடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
திருடிய நகைகளை விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கணேஷ் மற்றும் மல்லிகாவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள காந்திராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.
பிடிபட்டவர்களிடம் இருந்து நகைகள் விற்பனை பணம் ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.