சுவிட்சர்லாந்து நாட்டில் விவசாயம் செய்த பெற்றோருக்கு உதவ சென்ற மகன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Ganterschwil என்ற பகுதியில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன் தினம் தோட்டத்தில் பெற்றோர் விவசாயப் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
பெற்றோருக்கு உதவுவதற்காக அவர்களுடைய 28 வயதான மகன் ட்ராக்டர் வாகனத்தில் சென்றுள்ளார். நிலத்தில் உள்ள தேவையற்ற களைகளை நீக்கும் பணியில் அவர் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
அப்போது, ஒரு பள்ளத்திற்கு அருகில் ட்ராக்டர் சென்றுள்ளது. அப்பகுதியில் நிலம் மிகவும் ஈரமாக இருந்ததால் ட்ராக்டர் திடீரென சரிந்து விழுந்துள்ளது.
சுமார் 25 மீற்றர் ஆழமுள்ள அந்த பள்ளத்தில் வாகனம் விழுந்ததும், அதில் இருந்த ஓட்டுனருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
எனினும், பள்ளத்தில் இறங்கி அவரை காப்பாற்ற முயன்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார். சடலத்தை மீட்ட பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பெற்றோர் கண் முன்னால் மகன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.