ஆன்லைன் மூலம் வாங்கிய, பிரபல நிறுவனத்தின் சாக்லேட்டில், புழுக்கள் இருந்ததால், அதை வாங்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆன்லைனில் தரமாகவும், விலை குறைவாகவும் பொருட்கள் வாங்கலாம் என்று மக்கள் கருதுவதால், ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆர்.சந்தோஷ் குமார், ஆன்லைனில் வாங்கிய பிரபல நிறுவனத்தின் சாக்லேட்டில், நுாற்றுக்கணக்கான புழுக்கள் இருந்துள்ளன.
இது குறித்து அவரது தந்தை ரமேஷ் கூறியதாவது:
ஆக., 14ம் தேதி, 'குரோபர்ஸ்' என்ற இணையதளத்தில், என் மகன் சந்தோஷ் குமார், பலவித சாக்லேட் மற்றும் பிஸ்ெகட்கள் என, 1,375 ரூபாய்க்கு, 'ஆர்டர்' செய்தான்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த நிறுவனம் மூலம், ஆன்லைன் ஆர்டருக்கான பொருட்கள், 15ம் தேதி வீட்டிற்கே வினியோகம் செய்யப்பட்டன.
அதில், ஆர்டர் செய்யப்பட்ட, பிரபல நிறுவனத்தின் பாதாம் சாக்லேட் இருப்பு இல்லாததால், அதற்கு பதில், 89 ரூபாய் மதிப்பிலான, 'ரம் ரைசின்ஸ்' என்ற சாக்லேட்டை வழங்கினர்.
அந்த சாக்லேட்டை மூன்று நாட்கள் கழித்து திறந்து பார்த்த போது, அதில் நுாற்றுக் கணக்கான புழுக்கள் உயிருடன் இருந்தன. உடனே, சாக்லேட் தயாரிப்பு தேதியை பரிசோதித்தோம்.
வரும் டிசம்பர் வரை காலாவதி தேதி உள்ளதாக குறிப்பிடப் பட்டிருந்தது. இது குறித்து, சென்னை மாநகராட்சியின், 48வது வார்டு சுகாதார அதிகாரி இளங்கோவிடம் புகார் அளித்துள்ளோம்.
சாக்லேட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரவும் தயாராக உள்ளேன். இந்த சாக்லேட் உண்மையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திலுள்ளதா அல்லது போலியாக தயாரிக்கப் பட்டதா? என, சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், அந்த சாக்லேட்டை ஆய்வு செய்த, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி கள், பெரம்பூரிலுள்ள சாக்லேட் வினியோக நிறுவனத்தில், நேற்று விசாரணை நடத்தினர்.
புழுக்கள் இருந்த சாக்லேட் உணவு பரிசோதனைக்கும் அனுப்பப் பட்டுள்ளது. 'பரிசோதனை அறிக்கைப்படி, நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப் படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.