அசாமில் மழைக்கு 12 பேர் பலி | Raining in Assam kills 12 !

அசாமில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் 12 பேர் பலியாகி உள்ளதாகவும், சுமார் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
அசாமில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 19 மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளனர். 

சுமார் இரண்டாயிரம் கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற காஜிரங்கா மற்றும் மனாஸ் தேசிய பூங்காக்கள் மழை நீரில் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் சர்பானந்தா சோனோவால் அறிக்கை வெளியிட்டார். அவர் கூறுகையில்,

வெள்ள பாதிப்பு என்பது மாநிலத்தில் கொழுந்து விட்டு எரியும் பிரச்னையாக உள்ளது. அனைத்து தொகுதிகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. 

இதுவரை 12 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனர். சுமார் 16 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்பை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் என்றார்.
Tags:
Privacy and cookie settings