கல்வி வியாபாரம் ஆகிப்போனதன் விளைவால், தமிழகத்தில் அதிகரித்து விட்ட வகுப்பறை வன்முறைகளுக்கு மத்தியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்களது ஆசிரியர் ஒருவரைக் காப்பாற்றிட,
பள்ளி மாணவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனை செய்ததோடு, மாணவர்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி,
எப்படியாவது தங்கள் ஆசிரியர் உயிர் பிழைக்க வைக்க துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கை வீணாகிப் போனது மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இங்கு படித்த 14 மாணவர்கள்
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றார்கள். மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடிப்பதால் இந்த அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
கொத்தமங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2012 ஆண்டு முதல் முதுநிலை விலங்கியல் பாட ஆசிரியராக பணியாற்றியவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்பனைமரக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்.
பணியில் சேர்ந்த பின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறையோடு செயல்பட்டு அப்பள்ளியில் படித்த 7 மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கவும் ரவிச்சந்திரன் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
அடுத்து அவரின் உடல்நிலையில் மோசமாக இருந்ததால் ரவிச்சந்திரனை திருச்சியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அங்கு சேர்த்த போது தான் தெரிந்தது ரவிச்சந்திரனின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயல் இழந்து விட்டது என்கிற விஷயம்.
அடுத்து.அவரை குணப்படுத்திட 90 லட்சம் வரையில் செலவாகும் என மருத்துவர்கள் கூற அவரின் குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இவ்வளவு பணம் தங்களால் கட்ட முடியாத நிலையில் செய்வதறியாமல் அந்த குடும்பம் தவிக்க, ஆசிரியர் ரவிச்சந்திரனைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற அடிப்படையில் அவரவர் தங்களுக்குத் தெரிந்த வழிகளில் முயற்சி செய்தனர்.
ஒரு கட்டத்தில் மருத்துவர்கள் கேட்டப்பணம் தங்களால் கட்ட முடியாது என்கிற நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த ரவிச்சந்திரனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இந்த தகவல் கொத்தமங்கலம் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியவே பள்ளி மாணவர்கள் துயரத்தில் மூழ்கினர்.
இதுவரை .தங்களுக்கு நல்ல ஆசிரியராக இருந்து தற்போது உயிருக்காக போராடி வரும் தங்கள் ஆசிரியர் உயிரை காத்திட
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டி தனித்தனியே அந்தப் பள்ளி மாணவர்கள் 400 பேர் கண்ணீரோடு கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.
அத்தோடு தங்கள் ஆசிரியர் உயிர் பிழைத்து உடல் நலத்தோடு மீண்டும் பள்ளிக்கு வரவேண்டும் என்று மாணவர்கள் ஒன்று சேர்ந்து காலையும் மாலையும் தீவிரமாக பிராத்தனையும் செய்து வந்தனர்.
தொடர் முயற்சிகளுக்கு பிறகு, மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
ஆசிரியர் ரவிசந்திரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, முதல்வர் ஜெயலலிதா உங்களுக்குத் தேவையானதை செய்யச் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறியதோடு,
அங்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களை அழைத்து சிறப்பு சிகிச்சையளித்திட ஆலோசனையும் வழங்கினார்.
தொடர் சிகிச்சையின் காரணமாக ஆசிரியரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சென்னையில் இருந்து தகவல்கள் வர, மாணவர்கள் மகிழ்ச்சியோடு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
நேற்று(செவ்வாய்) காலை 10மணியளவில்,பள்ளி தலைமை ஆசிரியர் மேகநாதனுக்கு போன் செய்த ஆசிரியர் ரவிச்சந்திரன்
தனக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துத் தெளிவு படுத்திக்கொள்ள சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு டயாலஸிஸ் செய்யப்பட்டு வந்தது.
நம்பிக்கையோடு தலைமையாசிரியரிடம் பேசிய ரவிச்சந்திரன், இப்போ உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. விரைவில் குணமடைந்து பள்ளிக்கூடத்திற்கு வருவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று(புதன்) காலை10மணிக்கு ரவிச்சந்திரனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
அடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி காலை 11 மணியளவில் மரணம் அடைதுள்ளார்.
ஆசிரியர் இறந்த போன செய்தியை உறுதிபடுத்திக் கொள்ள ரவிச்சந்திரன் உறவினர்கள், நண்பர்கள் என பலரை தொடர்பு கொண்டு உறுதிபடுத்த முடியாத நிலையில் பள்ளி தலைமையாசிரியர் மேகநாதனிடம் பேசினோம்.
'ரவிச்சந்திரன் எங்களை விட்டு போய்ட்டார் சார்' என உடைந்த குரலில் பேச தொடங்கியவர், ரவிச்சந்திரன் சார் சென்னையில் இருந்ததால் இறந்த தகவல் கிடைக்க காலதாமதம் ஆனது.
உறுதிப்படுத்துவதும் கூட சிரமமாகிப் போனது. நேற்றுக் காலை எனக்கு போன் செய்தார் சார். அப்போ ரவிச்சந்திரன், ' எனக்காக நம்ம மாணவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியதால்,
இப்போது முதல்வர் தனிக் கவனம் செலுத்தி அமைச்சரை நேரில் அனுப்பி சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்திருக்காங்க. இப்போ உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இரண்டு வாரத்தில் எல்லாம் சரியாகி ஸ்கூலுக்கு வந்து விடுவேன், அப்படி வந்து, ஒரு வாரத்தில் அவர்களுக்கு பாடம் நடத்தி முடிச்சிடுறேன்னு நம்ம பசங்களிடம் சொல்லுங்கள். எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால்
இதுவரை நடத்தாமல் உள்ள பாடங்களையும் சனி, ஞாயிற்று கிழமைகளில் ஸ்பெசல் கிளாஸ் வைத்து சீக்கிரம் முடிச்சி தந்து விடுவேன்.
அனைத்து மாணவர்களையும் நல்ல முறையில் மதிப்பெண் பெற வைப்பேன், இந்த ஆண்டும் சிலரை மருத்துவ மாணவர்களாக அனுப்புவேன் என்று சொல்லுங்கனு' சொன்னாரு.
அவர் நம்பிக்கையோடு பேசிய வார்த்தை எங்களுக்கு மிக ஆறுதலாக இருந்தது. அதை அப்படியே மாணவர்களிடமும் சொன்னேன்.
எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள், ஆனால் எங்கள் நம்பிக்கையை வீணடித்து விட்டு அவரை ஆண்டவன் பறிச்சிக்கிட்டாரே" என்றார் கண்ணீரோடு.
குடும்பத்தை பற்றியும் கவலைப்படாமல் அரசுப் பள்ளி மாணவர்களையே, அவர்களின் கல்வியையே சாகும் வரை நினைத்திருந்த ஒரு உண்மையான ஆசிரியரின் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.