போலி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா நாளை ஆஜராக உள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராகும் சசிகலா புஷ்பா புதிய புகாரை வைத்து கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. தமது வீட்டில் வேலைபார்த்த பணிப்பெண்கள் இருவர் சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தம்மை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்தனர்.
ஆனால் அது போலி முன்ஜாமீன் மனு; வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி மதுரையில் கையெழுத்திட்டதாக கூற முடியும்? என அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனால் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று சசிகலா புஷ்பாவுக்கு உத்தர விடப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தரப்பு முறையீடு செய்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்கு சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை விதித்தது; அத்துடன் 29-ந் தேதியன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டது. சிங்கப்பூர் சென்றிருந்த சசிகலா இன்று தமிழகம் திரும்புவார் என தெரிகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா புஷ்பா நாளை மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் அனேகமாக புதிய புகார் ஒன்றின் கீழ் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சசிகலா புஷ்பாவின் 'நெட்வொர்க்' முழுவதையும் உளவுத்துறை படு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மதுரையில் நாளை பெரும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.