வழக்குகள் பதிவு செய்வதன் மூலம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்க சதி செய்யப் படுகிறது என உயர் நீதி மன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
காரைக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 38 பேரிடம் ரூ.60 லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பாபு, சுப்புராஜ் ஆகியோர் மீது வழக்கு பதியக்கோரி சுப்பையா என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில் செந்தில் பாலாஜி உட்பட 3 பேர் மீது சிவகங்கை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.விமலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ஜி.ஆர். சுவாமிநாதன் மனு தாக்கல் செய்தார்.
அவர் வாதிடும் போது, மனுதாரர் போக்குவரத்து துறையில் பணி புரியவில்லை.
அவர் புகாரில் செந்தில்பாலாஜி மீது தெரிவித்துள்ள குற்றச் சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. செந்தில் பாலாஜிக்கும் தனக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக புகார்தாரர் தெரிவிக்க வில்லை.
போலீஸாரும், புகார்தாரரும் கூட்டுச்சதி செய்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேலிடத்தின் அழுத்தம் காரணமாக செந்தில் பாலாஜி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜியை பேரவைத் தேர்தலில் போட்டியிட விடாமல் சதி செய்கின்றனர். இதனால் அவர் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து மனுதாரர் தொடர் பான ஆவணங்களை போக்கு வரத்து கழகம் தாக்கல் செய்ய உத்தர விட்டு, விசாரணையை ஆக.30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.