நகைக்கடையின் அடியில் சுரங்கப்பாதை அமைத்து கொள்ளை !

நெய்வேலியில் நகைக்கடைக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகளை துணிகரமாக கொள்ளை யடித்த கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைக்கடையின் அடியில் சுரங்கப்பாதை அமைத்து கொள்ளை !
சுரங்கப்பாதை

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் நெய்வேலி மந்தாரக் குப்பத்தில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் மந்தாரக் குப்பத்தை சேர்ந்த உமா பாரதி பணியாற்றி வருகிறார்.

கடை ஊழியர் உமாபாரதி நேற்று காலை கடையை திறந்தார். அப்போது கடையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த அனைத்து தங்க நகைகளும்,

வெள்ளி நகைகளும் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் கடையின் பின்புறம் ஒரு ஆள் கடைக்குள் வந்து செல்லும் வகையில் குழி தோண்டி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

1½ கிலோ தங்க நகைகள்
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த கடையின் பின்புறத்தில் உள்ள பள்ளி மைதானத்துக்கும், நகைக் கடைக்கும் இடையில் ஒரு சிறிய சந்து உள்ளது. 

நள்ளிரவில் மர்ம நபர்கள் பள்ளி மைதானத்தின் வழியாக வந்து, சுற்றுச் சுவரில் ஏறி குதித்து அந்த கடையின் பின்புறத்தில் சுமார் 2 அடி ஆழத்திற்கு குழி தோண்டி சுரங்கப்பாதை அமைத்துள்ளனர்.

பின்னர் அதன் வழியாக கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த லாக்கர் பூட்டை சிறிய ரம்பத்தால் அறுத்து எடுத்து அதில் இருந்த 1½ கிலோ தங்க நகைகளையும்,

கடையில் அடுக்கி வைத்திருந்த 25 கிலோ வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும் என தெரிகிறது.

கண்காணிப்பு கேமரா உடைப்பு
கொள்ளை நடந்த நகைக் கடையில் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. 

நள்ளிரவில் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் ஒரு கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்துள்ளனர்.

மற்றொரு கண்காணிப்பு கேமராவை துணியால் மூடியதுடன் லாக்கர் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை செயல் இழக்க செய்துவிட்டு தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். 

இருந்த போதிலும் அந்த கண்காணிப்பு கேமராக்களையும், அதில் பதிவாகிய காட்சிகளை சேமித்து வைக்கும் கருவியையும் கைப்பற்றி போலீசார் பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதே பாணியில் 2-வது சம்பவம்
மந்தாரக் குப்பத்தில் நேற்று கொள்ளை நடந்த அதே கடையில் கடந்த 2005-ம் ஆண்டும் கொள்ளை நடந்துள்ளது. அப்போது அந்த கடை வேறு பெயரில் இருந்தது. 

அந்த கடையின் பின்புறத்தில் இருந்து கடைக்குள் சுரங்கம் அமைத்து 2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. 

பின்னர் அந்த கடையை சுரேஷ் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அதே பாணியில் கொள்ளை நடந்துள்ளது.

சுரங்கப்பாதை அமைத்து நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக, கொள்ளையர்கள் கடப்பாறை கம்பி, உளி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி யுள்ளனர். 

பின்னர் தாங்கள் கொள்ளை யடிக்க பயன்படுத்திய ஆயுதங்களை நகைக்கடை அருகில் தபால் நிலையத்தின் புன்புறத்தில் உள்ள முட்புதரில் வீசிச்சென்றுள்ளனர். 
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings