ஆக்ஸிஜனைக் கொண்டு இயங்கும் 'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினை வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்த்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இன்றைய பரிசோதனை இஸ்ரோவின் சாதனை வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் 'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினை விஞ்ஞானிகள் வெற்றிகரமான பரிசோதித்தனர். இந்த ராக்கெட்டானது வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இயங்குவது ஆகும்.
வழக்கமாக ராக்கெட்கள் பறப்பதற்கு தேவையான ஹைட்ரஜன் வாயுவை எரியூட்டுவதற்காக ராக்கெட்டின் பக்கவாட்டில் உள்ள டாங்கிகளில் ஆக்சிஜன் அடைத்து வைத்து அனுப்பப்படும்.
'ஸ்கிராம்ஜெட்' ரக ராக்கெட் என்ஜினில் பயன் படுத்தப் பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தின் படி, வளி மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இத்தகைய ராக்கெட் என்ஜின்கள் பறக்கும், எடை குறையும், திறன் அதிகரிக்கும்.
இதன்மூலம் விண்கலங்களை ஏவும் செலவு பத்து மடங்கு குறையும். தற்போதைய நிலவரப் படி, ஒருகிலோ எடை கொண்ட பொருளை விண்ணில் செலுத்த 20 ஆயிரம் டாலர்கள் வரை செலவாகிறது.
ஆனால், இன்றைய ராக்கெட் பரிசோதனை வெற்றி மூலம் வரும் காலத்தில் இந்த செலவு வெகுவாகக் குறையும். எனவே, இது இஸ்ரோ வரலாற்றில் மேலும் ஒரு சாதனையாகக் கருதப் படுகிறது.
ஏற்கனவே, இந்த நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், இன்றைய பரிசோதனை வெற்றி மூலம் அந்தப் பட்டியலில் மூன்றாவது நாடாக இந்தியா இணைந்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானி சிவன் கூறுகையில், "வளி மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு இயங்கும் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. ராக்கெட் ஏவப்பட்ட 55வது விநாடியில் சோதனை வெற்றிப் பெற்றது.
7 விநாடிகளில் திரவ ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எரியூட்டப் பட்டது. ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எரியூட்டப் பட்ட நிகழ்வு எதிர் பார்க்கப் பட்ட 5 விநாடிகளை காட்டிலும் அதிகம். ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என்றார்.
உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான மறுபயன்பாட்டு ராக்கெட் இது என்பது கூடுதல் தகவல். முன்னதாக இந்த ராக்கெட் என்ஜின் சோதனை பல நாட்களுக்கு முன்னரே நடத்தப்பட திட்டமிடப் பட்டிருந்தது.
ஆனால் மாயமான ஏஎன் 32 விமானத்தை தேடும் பணிக்காக வங்கக் கடலில் ஏராளமான கப்பல்களும், விமானப்படை விமானங்களும் நிறுத்தப் பட்டிருந்ததால் இஸ்ரோ இந்த ராக்கெட் சோதனையை ஒத்தி வைத்தது குறிப் பிடத்தக்கது.
குடியரசுத்தலைவர் வாழ்த்து:
இந்த சோதனை வெற்றி அடைந்த ததையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஸ்கிராம்ஜெட் ராக்கெட் என்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானி களுக்கு என இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்.
ராக்கெட் என்ஜின் சோதனை இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான மறு பயன்பாட்டு ராக்கெட் இது" எனத் தெரிவித்துள்ளார்.