இறந்து போன மனைவியின் உடலை 10 கி.மீ., தூரம் கணவர் தூக்கி சென்ற விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,
இறந்து போன பெண்ணின் எலும்பை உடைத்து ஊழியர்கள் தூக்கி சென்றது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ நகரை சேர்ந்த சலமனி பாரிக்(76) என்ற மூதாட்டி ரயில் மோதி பலியானார்.
இதனையடுத்து அவரது உடல் அங்குள்ள சமுதாய நல கூடத்தில் வைக்கப் பட்டிருந்தது. அங்கு போஸ்ட் மார்டம் செய்ய வசதியில்லாததால், 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல தீர்மானிக்கப் பட்டது.
அங்கு ஆம்புலன்ஸ் வசதியில்லாததால், ரயில் மூலம் எடுத்து செல்ல ரயில்வே போலீசார் முடிவு செய்தனர்.
ரயில் நிலையத்திற்கு உடலை எடுத்து செல்ல ஆட்டோ ரிக்ஷாவை போலீசார் அழைத்த போது அதிக பணம் கேட்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் மூலம் உடல் ரயில் நிலையத்திற்கு எடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டது.
எடை காரணமாக தூக்கி செல்ல சிரமப்பட்ட ரயி்வே ஊழியர்கள், அந்த மூதாட்டியின் இடுப்பெழும்பை தங்களது காலால் உடைத்து பையில் வைத்து கம்பில் கட்டி 2 கி.மீ., தூரத்திலுள்ள ரயில் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
இறந்து போன மூதாட்டியின் மகன் ரபீந்திர பாரிக் கூறுகையில்," உடைந்த நிலையில் எனது தாயாரை எடுத்து சென்றனர்.
நான் எதுவும் செய்ய இயலாமல் தவித்தேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்க கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை எனக் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறு, பாலசோர் மாவட்ட நிர்வாகத்திற்கும், ரயில்வே போலீசாருக்கும் ஒடிசா மாநில மனித உரிமைகள் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
Tags: