பிரேசில் நாட்டில் பட்டப்பகலில் பொதுஇடங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிரட்டி அந்நாட்டு சிறுவர்கள் திருடும் காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள Rio de janeiro என்ற நகரில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருவதால் உலக மக்களின் ஒட்டு மொத்த பார்வையும் இந்த நகர் மீது தான் உள்ளன.
உலகமே உற்று நோக்கும் இந்த நகரில் அந்நாட்டின் புகழை சீர்குலைக்கும் வகையான செயல்கள் நடந்து வருவது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை காண ஆயிரக்கணக்கான வெளி நாட்டினர்கள் இந்த நகரில் குவிந்து வருவதால், இவர்களிடம் திருடும் சிறுவர்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது.
இதே நகரை சேர்ந்த சிறுவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து சாலையில் செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பின் தொடர்கிறார்கள்.
பின்னர், அவர்களின் கவனம் சிதறும் நேரத்தில் அவர்கள் கையில் உள்ள பொருட்களை பறித்துக் கொண்டு ஓடி விடுகின்றனர்.
இது மட்டுமில்லாமல், சிலரிடம் பொருட்களை பறிக்க முடியவில்லை என்றால், அவர்களை மிரட்டி அடித்து விட்டு பொருட்களை பறித்து செல்கின்றனர்.
பொது இடங்களில் எவ்வித பரபரப்பும் இன்றி மிக சாதாரணமாக இத்திருட்டு சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
இது தொடர்பாக பலர் பிரேசில் நாடு குறித்து அதிருப்தியான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ள கருத்தில் ‘அடுத்த மாதம் பிரேசில் நாட்டிற்கு செல்ல விமான டிக்கெட் பதிவு செய்தேன்.
ஆனால், இந்த வீடியோவை பார்த்த பிறகு பிரேசில் செல்லும் திட்டத்தை கை விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயலை நான் வேறு எந்த நாட்டிலும் பார்க்கவில்லை. பொது மக்கள் அதிகமாக உள்ள சாலையில் சிறுவர்கள் துணிச்சலாக திருடுகிறார்கள்.
ஆனால், இதனை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. பிரேசில் நாட்டில் இப்படி ஒரு அவலநிலையா? என வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.