தஞ்சை அடுத்த சாலிய மங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கலைச்செல்வி (20). இவரது தாய் ஏற்கனவே இறந்து விட்டார்.
அதே பகுதியில் உள்ள அவரது பெரியம்மா பாப்பாம்மாள் வீட்டில் வளர்ந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் கொல்லைப்புறம் சென்ற கலைச்செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள முட்புதரில் கலைச்செல்வி கொலை செய்யப்பட்டு கிடந்ததும், பலாத்காரம் செய்யப் பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததும் தெரிய வந்தது.
அம்மாபேட்டை போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் இந்திய மாதர் சங்கத்தினர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்த இயக்கத்தினர் மற்றும் கலைச்செல்வி உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என கூறி பிரேத பரிசோதனை கூடம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
கலைச்செல்வி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட கலைச்செல்வி குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
அப்போது தான் உடலை பெற்றுக் கொள்வோம் என கூறினர். தாசில்தார் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் இன்ஸ்பெக்டர் மீனா ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கலைச்செல்வி உடல் சாலியமங்கலம் கொண்டு செல்லப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
கொலை தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நபர் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை,
கும்பலாக சேர்ந்து சிலர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: