பள்ளி ஆசிரியர்கள் அடித்ததால் மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவன் சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வடவள்ளி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாபு,
கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள அமலநாதன் அரசு மேல் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை பாபு வீட்டில் வாந்தி எடுத்துள்ளான்.
மேலும், தான் சாணிப்பவுடர் குடித்து விட்டதாகவும் இதுகுறித்து விரிவான கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் கூறினான். இதனையடுத்து, பாபுவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, வழியிலேயே இறந்து விட்டதாக பாபுவை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பாபுவின் உறவினர்கள் கூறுகையில், பள்ளி ஆசிரியர்கள் கார்த்தி, குணசீலன், கந்தையா ஆகிய மூன்று பேர் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக பாபுவை அடித்து துன்புறுத்தியதாகவும்,
இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்த அவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.