பள்ளிக்கூட வாசலில் பயங்கரம் !

புதுப் புத்தகம், புதுச் சீருடை எனப் புது உற்சாகத்தோடு மீண்டும் பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டனர் குழந்தைகள். கூடவே பள்ளிக்கு அருகிலேயே நடத்தப்படும் வியாபாரங்களும் களைகட்டத் தொடங்கி விட்டன.
பள்ளிக்கூட வாசலில் பயங்கரம் !
அரசு எவ்வளவுதான் தடை விதித்தாலும், குழந்தைகளை கவரும் வகையில், அவர்களின் உடல் நலத்தை பாதிக்கும் பொருட்களின் விற்பனையை வியாபாரிகள் குறைப்பதாகத் தெரியவில்லை.

குழந்தைகளின் கைக்கு எட்டும் தூரத்தில், அவர்களின் ஆரோக்கியத்துக்குக் கேள்விக் குறியாக இருக்கும் எண்ணிலடங்கா பொருட்கள் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரானேஷ்.

குழந்தைகளை ஈர்க்கும் அத்தகைய பொருட்களிலுள்ள ஆபத்துகள் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் அவர்... குழந்தைகளை வெகுவாக கவரும் வகையில் அவர்களை பாதிக்கும் பல்வேறு பொருட்கள் லாப நோக்கத்துக்காக சந்தைப் படுத்தப் படுகின்றன.

இவை ஆபத்தானதாக இருந்தாலும், குழந்தைகளுக்குப் பிடிக்கிறது என்ற காரணத்துக்காகவே விபரீதம் புரியாமல் வாங்கிக் கொடுக்கும் பெற்றோரும் இருக்கின்றனர். 

குழந்தைகளின் சுவாசத்தை பாதித்து, உயிரிழப்பு வரை கொண்டு சென்ற அரசால் தடை விதிக்கப்பட்ட ‘ஜெல்லி பால்’ இப்போதும் எல்லா ஃபேன்சி ஸ்டோர்களிலும் தங்கு தடையின்றி கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. 
இவற்றை தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைப்பதால் பெரியதாகி விடுகிறது. 

பல வண்ணங்களில் விற்கப்படும் இந்த ஜெல்லி பால்கள் மீன் தொட்டிகளில் போட்டு வைக்கவும், அழகுப் பொருளாகவும், பர்த்டே பார்ட்டிகளில் அலங்காரத்துக் காகவும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.

நாளடைவில் இந்த ஜெல்லி பால் மோகம் அதிகமாகி, குழந்தைகள் வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்தனர். பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் எளிதாக கிடைப்பதால் 

இதை வாங்கி, தண்ணீர் பாட்டில்களில் போட்டு வைத்து, விளையாடவும், ஜெல்லி மிட்டாய்களை போல இருப்பதால் சாப்பிடவும் செய்கின்றனர். 

இதில் கலக்கப்படும் பாலி அக்ரிலேட் (Polyacrylate) என்ற வேதிப்பொருள் தண்ணீரில் போடும் போது நீரை உறிஞ்சி பெரிதாகும் தன்மை உடையது. 
இவற்றை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, அஜீரணம், வயிற்றுப்புண் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 

அதிகம் உட்கொண்டால் குடல் அடைப்பு மற்றும் குடல் ஓட்டை போன்ற ஆபத்தும் ஏற்படக் கூடும். 

இது உடலில் உள்ள நீரை உறிஞ்சி, உடலுக்கான நீரோட்டத்தை தடை செய்கிறது. பாலி அக்ரிலேட் ரசாயனம் கலந்த பொருட்களை வைத்து குழந்தைகள் விளையாடுவதால் கண் மற்றும் சரும நோய்களும் தாக்கும். 

ஜெல்லி மிட்டாய்கள், பப்பிள் கம், சூயிங்கம் போன்றவற்றை குழந்தைகள் அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்கள். 

சர்க்கரை, கூழ்மமாக்கி (Emulsifier) மற்றும் மெழுகுப் பொருள் சேர்க்கப்படும் இவற்றைச் சாப்பிடுவதால் எந்த நன்மையும் கிடையாது.

இவை வயிற்றினுள் செல்லும் போது வயிற்றுவலி, வயிறு உப்புதல், பல்சொத்தை, பல்வலி போன்ற பிரச்னைகளே ஏற்படும். இவற்றை மெல்லும் போது காற்று வயிற்றினுள் சென்று பசி ஏற்படாமல் செய்து விடும். 

இதனால் குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மாறி விடுகின்றன. சிகரெட் போன்ற வடிவத்தில் முழுவதும் சர்க்கரையாகவோ, 
பள்ளிக்கூட வாசலில் பயங்கரம் !
செயற்கை இனிப்பு கலந்தோ பல வண்ணங்களில் தயாரிக்கப்படும் சிகரெட் மிட்டாய்களை சிகரெட் ஊதுவதாக நினைத்து விளையாடி விட்டு, அதை சாப்பிடும் பழக்கம் குழந்தைகளிடையே அதிகரித்துள்ளது. 

இவற்றில் எந்த ஊட்டச்சத்தும் கிடையாது. இவற்றில் சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள் சேர்க்கப் படுவதால் அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு பருமன் பிரச்னை வருகிறது. 

இதை சிகரெட் ஊதுவது போல விளையாடும் சிறுவர்கள் நாளடைவில், தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடும் அபாயமும் உள்ளது. 

பள்ளிகளுக்கு அருகில் விற்கப்படும் குல்ஃபி ஐஸ், குச்சி ஐஸ் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் தரமானதாக இருப்பதில்லை. 

தரமற்ற தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகளால் காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உண்டு. இவற்றையும் குழந்தைகள் தவிர்ப்பதே நல்லது.
சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனி பாக்ெகட்டுகளில் நைட்ரஜன் வாயு அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. 

இந்த வாயு பாக்டீரியா போன்ற கிருமிகள் தாக்காமல் இருக்க பயன்படுவதால், கிருமிகளால் ஏற்படும் நோய் வராவிட்டாலும், மற்ற ஆரோக்கிய கேடுகள் ஏற்படலாம். 

இதுபோன்ற உணவுப் பொருட்களையும் தவிர்ப்பதே நல்லது. இன்றைய குழந்தைகள் சாக்லெட், பர்கர், ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பி உண்கின்றனர். 

இவற்றால் தீங்குகளே அதிகம். இதுபோன்ற தவறான உணவுகளை குழந்தைகள் உண்பதிலிருந்து மீட்க, பெற்றோரே ஆரோக்கிய உணவுகளை பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம்.

சில பள்ளிகளில் நிர்வாகமே, குழந்தைகள் உடலுக்கு தீமை தரும் நொறுக்குத் தீனிகளை தடை செய்திருக்கிறது. 
பள்ளிக்கூட வாசலில் பயங்கரம் !
இது வரவேற்க வேண்டிய நடவடிக்கை. இதுபோல அரசுப் பள்ளிகளிலும் செயல் படுத்தினால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் என்கிறார் மருத்துவர் பிரானேஷ்.

பள்ளிப்பையில் புகையிலைப் பொருள்!

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தன்று வெளியான செய்தியில், பள்ளிகளுக்கு அருகில், 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள கடைகளில் சிறுவர்களின் கண்ணில் தெரியும்படி மிட்டாய்கள், 

சாக்லெட் போன்ற தின் பண்டங்களோடு, புகையிலைப் பொருட்களையும் வைத்து விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது.

புகையிலைக்கு எதிராக குழந்தைகள்’ என்ற மாணவர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், சென்னையின் பிரதான பகுதிகளான ஆழ்வார் பேட்டை, வேளச்சேரி மற்றும் தியாகராய நகர் பகுதிகளில், பள்ளிகளுக்கு அருகிலுள்ள பெட்டிக் கடைகளிலும், 
மளிகைக் கடைகளிலும் சிகரெட் விற்பனை மற்றும் குழந்தைகள் சாப்பிடும் வகையில், புகையிலைப் பொருட்கள் சிறிய வடிவிலான 

‘சாஷே’ பாக்ெகட்டுகளாக வடிவமைக்கப் பட்டு ‘Cool Lip’ என்ற பெயரில் விற்பனை செய்யப் படுவதாகவும் கண்டறியப் பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பே மென்று தின்னக் கூடிய புகையிலைப் பொருட்கள் தமிழக அரசால் தடை செய்யப் பட்டிருப்பினும், வெளி மாநிலங்களிலிருந்து தடையின்றி இவை தமிழகத்துக்குள் வந்து கொண்டிருக்கின்றன. 

தலைமை ஆசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களின் புத்தகப் பைக்குள் இருந்து புகையிலைப் பொருட்களை எடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி பள்ளிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 
பள்ளிக்கூட வாசலில் பயங்கரம் !
நோட்டீஸ் போர்டில் புகைப் பழக்கத்துக்கு எதிரான எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைப்பதோடு கடமை முடிந்து விட்டதாக கல்வி நிறுவனங்கள் நினைத்துக் கொள்கின்றன.

அரசாங்கம் இது போன்ற பொருட்களை கல்வி நிறுவனங்களுக்கு அருகில் வைத்து விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் 

அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் உதவி தலைமைப் பேராசிரியரும், புற்றுநோய் நிபுணருமான டாக்டர் விதுபாலா. 

பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள், மருத்துவ மனைகளுக்கு அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட வில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என சென்னையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இச்சோதனை அனைத்து ஊர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும்..... நன்றி குங்குமம் டாக்டர்.
Tags:
Privacy and cookie settings