மேம்பாலம் என்றாலே அரசியல் மற்றும் சினிமா சுவரொட்டிகளை ஒட்டி, பாலம் இருக்கிறதா, இல்லையா என்பதையே அறிய முடியாத அளவுக்கு பாலத்தின் சுவர்களை வீணாக்கி, அழுக்காக்கி மறைத்து விடுவார்கள்.
திருச்சி பாலக்கரை பாலமும் இதில் விதிவிலக்கல்ல. நேற்று வரை பொலிவிழந்து முகம் சுளிக்கும் வகையில் இருந்த இந்த பாலம்,
இன்று பளபள ஓவியங்களால் அந்த வழி கடப்பவர்களை ஒரு சில நிமிடங்கள் நின்று பார்க்க வைக்கிறது.
இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள், திருச்சி பிஷப் பள்ளி மாணவர்கள். பாலத்தை தூய்மைப்படுத்தி அதில் பெயிண்ட் அடித்து வண்ண மயமான ஓவியங்களை வரைந்து அசத்தியிருக்கிறார்கள் இவர்கள்.
தங்களுடைய ஓவிய ஆசிரியர், துரையின் வழிகாட்டுதலில் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று பாலக்கரை மேம்பாலம்
பக்கவாட்டு சுவரில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களுடன் இவர்கள் வரைந்த ஓவியங்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மரம் வளர்ப்போம், புவி வெப்ப மயமாதல், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், சாலை விபத்தை தவிர்ப்போம், புகை பிடிக்காதீா்,
மது அருந்தாதீர், இயற்கை காப்போம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் ஓவியமாக தீட்டியுள்ளார்கள். இந்த வாய்ப்பு எங்களுக்குள் சமூக அக்கறை ஏற்படுத்தியிருக்கிறது
மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் வகையில் எங்கள் ஓவியம் இருப்பதால் பொது மக்கள் மற்றும் சமூக ஆா்வலர்கள்
பாராட்டிச் செல்வது உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிஜத்தில் உயிர்கொடுக்க ஆரம்பித்துள்ள மாணவர்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது!