பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போதே ஆசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் மனதில் எட்டி பார்த்திருக்கும். எழுத்தறிவிக்கும் பணி மிகவும் சிறப்பானது.
ஆண்களை விடப் பெண்கள் ஆசிரியர் பணிக்கு வருவதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
பல நேரங்களில் தகுதியில்லாத, அங்கீகாரம் இல்லாத ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து எதிர் காலத்தைத் தொலைப்பவர்களைப் பார்த்திருப்போம்.
ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர விரும்புவோர் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ - National Council of Teacher Education) பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஏனென்றால், இந்தப் படிப்புக்கு அங்கீகாரம் வழங்கும் அமைப்பு அது தான்.
படிப்பையும் தரத்தையும் மேம்படுத்த
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் என்பது மத்திய அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக 1973-ல் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அப்போது மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் செயல்படத் தொடங்கியது.
ஆசிரியர் பயிற்சிப் படிப்பை மேம்படுத்தவும், தரத்தை உறுதி செய்யவும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் என்ற துறை பின்னர் அரசால் உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்தியா முழுவதும் இந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்குவதில் சில சிக்கல்கள் இருந்தன.
இதனை யடுத்துத் தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டு முறைப் படியான அதிகாரம் இந்த அமைப்புக்கு 1995-ல் வழங்கப்பட்டது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இந்தக் குழுமம் 1 முதல் 8-ம் வகுப்புவரை கற்பிக்கும் ஆசிரியர்களின் குறைந்தபட்சக் கல்வித் தகுதியை நிர்ணயம் செய்யவும்,
ஆசிரியர்களைத் தேர்வு செய்யவும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகுதித் தேர்வை வடிவமைத்துத் தரவும் அதிகாரம் பெற்ற அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
இந்த அமைப்பின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. ஜெய்ப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், போபால் ஆகிய நகரங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
கல்வித் தகவல்கள்
இந்த அமைப்பு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் முக்கியப் பணிகளைச் செய்துவருகிறது.
இந்த அமைப்புக்கென http://ncte-india.org/ncte_new/ என்ற இணையதளம் உள்ளது. இந்த இணைய தளத்துக்குச் சென்றால் ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் பட்டியலைக் காணலாம்.
குறிப்பாகப் பதிவு பெற்ற, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஒரு பயிற்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கை, குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
மேலும் அங்கே வழங்கப்படும் படிப்புகள், ஆசிரியர் பணி தேர்வுக்குப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் காணலாம்.
ஆசிரியர் பயிற்சிக் கல்வி தொடர்பான முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புகள், ஆன்லைனில் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் கல்வி நிறுவனங்களின் தகவல்களையும் இணைய தளத்தில் பார்க்கலாம்.
ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவ மாணவிகள், இந்த இணைய தளத்தை முழுமையாகப் பார்ப்பது நல்லது.