சமீபத்தில் இவ்வளவு அதிகமாகப் பேசப்பட்ட திரைப்படம் வேறெதுவும் இல்லை. ரஜினி இரஞ்சித் என்று இரு வேறு உலகங்கள் இணைகின்றன எனும் செய்தி வெளியானதிலிருந்து, ஊகங்களும் எதிர்பார்ப்புகளும் உருவாகத் தொடங்கி விட்டன.
வயதுக்குப் பொருத்தமான வேடங்களில் நடிப்பதில்லை. தனது வணிக வட்டத்தை விட்டு வெளியில் வர மறுக்கிறார் என்று வைக்கப்பட்ட வாதங்களைத் தகர்த்தெறிந்து விட்டு,
இரண்டே படங்களை இயக்கியிருந்த இளைஞருடன் கூட்டணி அமைத்தார் ரஜினிகாந்த். வெளியீட்டுத் தேதி நெருங்க நெருங்க இதுவரை எந்தத் தமிழ்த் திரைப்படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பு உருவாகி வளர்ந்தது.
எதிர்மறை விமர்சனங்கள்
படத்தைப் பற்றி முதல் இரண்டு நாட்கள் வெளியான விமர்சனங்களில் பெரும்பாலானவை எதிர் மறையானவை. படத்துக்கு வெளியே உள்ள விஷயங்களைப் பிரதானமாகக் கொண்டவை.
ஆனால், படம் அதன் போக்கில் நிதானமாக நகர்ந்து கொண்டிருந்ததைப் பொது ரசிகர்கள் கண்டு கொண்டனர்.
வழக்கமான ரஜினி முத்திரைகள் இல்லாத, நிதான வேகத்துடன் இயங்குகின்ற படம். அதிநாயக பிம்பத்திலிருந்து வெளியேறி, உணர்வு பூர்வமான பாத்திரத்தில் ரஜினியைப் பார்க்கக் காத்திருந்தவர்கள் திருப்தியுடன் பேசத் தொடங்கினார்கள்.
ஒரு திரைப்படம் என்ற வகையில், ‘கபாலி’ கொண்டிருக்கும் பலமும் பலவீனங்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதும், விமர்சனங்கள் வேறு தளத்துக்கு நகர்ந்தன.
‘தலித் அடையாளமா, தமிழ் அடையாளமா?’, ‘கதைக் களத்துக்கு மலேசியா தேர்வு செய்யப்பட்டது ஏன்?’ என்கிற ரீதியில் கேள்விகள் எழுந்தன.
தான் ‘கோட்’ அணிவதற்குப் பின்னால் இருக்கும் வரலாற்று அரசியலை ரஜினி பேசும் காட்சி இன்று வரை விவாதிக்கப் படுகிறது.
இத்தனைக்கும், அழுத்தமாக அல்லாமல், மெல்லிய தொனியில் பேசப்பட்ட அந்த வசனம், பலரிடம் பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறது.
ஆனால், ‘படிச்சி மேல வருவேண்டா, கோட் போடுவேண்டா’ என்று ரஜினி வெடித்துச் சீறும் இறுதிக் காட்சியின் வசனத்தைப் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் சமூக நியாயங்கள் பற்றியும் பெரிய விவாதம் நடக்கவில்லை என்பது வேறு கதை!
வெற்றியின் பின்னணி
வெளியாகி ஆறு நாட்களிலேயே ‘கபாலி’ ரூ. 320 கோடி வசூல் செய்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வெற்றி யடைந்திருக்கிறது.
இந்த வெற்றி, இன்னும் சில விஷயங்களை உணர்த்துகிறது. ‘பாட்ஷா’ பாதிப்பிலிருந்து இன்னும் வெளிவராத ரசிகர்களுக்கு, நிதான உடல் மொழியுடன், அளவான வசனம் பேசும் ரஜினியை ஜீரணிப்பதில் இருந்த சிரமம் ஓரிரு நாட்களில் மறைந்தது.
தொடக்க நாட்களில் சமூக வலைத்தளங்களில் முன் வைக்கப்பட்ட விமர்சனங்கள், சிறு நகரங்களில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை உணர முடிந்தது.
ஆரம்பகட்ட பரபரப்புகள் அடங்கிய பின்னர், நிதானமாகப் படத்தை அணுகும் ரசிகர்கள் படத்தைப் பாராட்டுகிறார்கள், அதன் நிறை குறைகளுடன்!
அமிதாப் வழி
உண்மையில், உச்ச நடிகர் ஒருவரை வைத்து, அதிகத் தலையீடுகள் இல்லாத, சமரசங்கள் குறைவான படத்தைத் தருவது என்பது தமிழ்த் திரையுலகில் அசாதாரணமானது.
அதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர் இயக்குநர் பா. இரஞ்சித். அதே போல், சலனத்தை ஏற்படுத்தும் வசனங்களையும், அழுத்தமான காட்சிகளையும் கொண்ட படத்தைத் தேர்வு செய்த ரஜினியைப் பலரும் வியப்புடன் பார்க்கிறார்கள்.
தன் கம்பீரத்துக்கு எந்தப் பங்கமும் நேராமல், வயதுக்குரிய பாத்திரங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சன் போல் ரஜினி ஏன் இன்னும் மாறாமல் இருக்கிறார் என்ற கேள்வி பொது ரசிகர்களிடம் இருந்தது.
இந்திய வணிக சினிமாவின் நாயக பிம்பத்தின் வடக்கு முகம் அமிதாப் என்றால், தெற்கு முகம் ரஜினிதான்.
‘பிளாக்’, ‘சர்க்கார்’, ‘நிஷப்த்’, ‘சீனி கம்’, ‘பிக்கு’ என்று அமிதாப் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அவருக்குப் புதிய, கம்பீரமான இடத்தைத் தந்தன.
ரஜினிக்கு இது சாத்தியமாகாமலே இருந்தது. இந்தச் சூழலில், ரஜினியின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும் படமாகவே ‘கபாலி’ அமைந்திருக்கிறது.
அதிநாயக பிம்பத்திலிருந்து முழுமையாக வெளிவரவில்லை என்றாலும், அதற்கான தொடக்கம் என்று நிச்சயம் இதைச் சொல்ல முடியும்.
ரஜினி படங்களில் பெண் பாத்திரங்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்த காத்திரமான விமர்சனங்கள் உண்டு.
இப்படத்தின் மூலம் அந்த வட்டத்திலிருந்தும் வெளி வந்திருக்கிறார் ரஜினி. மகளால் காப்பாற்றப்படும் தந்தை பாத்திரத்தில் அவர் நடித்திருப்பது சாதாரண விஷயமல்ல.
தனது நடை, உடை, பாவனைகள் எல்லாவற்றையும் மாற்றித் தன் வாழ்வில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியவள் எனத் தன் மனைவியை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.
அறிவும் துணிச்சலும் நிறைந்த மனைவியைப் பிரிந்து தவிக்கும் காட்சிகளில் ரஜினியின் நடிப்பில் அத்தனை அழுத்தம்.
சிறையிலிருந்து வீடு திரும்பும் போது, காணாமல் போன மனைவியின் பிம்பங்களை வீட்டின் ஒவ்வொரு அறையிலும் பார்க்கும் காட்சியில் ரஜினியின் நுணுக்கமான நடிப்பு அற்புதமானது.
படத்தின் திரைக்கதையில் இருக்கும் குழப்பங்கள் சரி செய்யப் பட்டிருந்தால் படம் முழுமையை நோக்கி நகர்ந்திருக்கும். கதையில் மலேசிய டான்களின் பின்னணிக்கான தரவுகளுக்கு இரஞ்சித்திடம் நியாயங்கள் இருக்கலாம்.
ஆனால், திரைக்கதையின் ஓட்டத்துடன் அவற்றைப் பிணைக்க வில்லை. இது போன்ற குறைகளுக்கு நடுவே, துணிச்சலான, அழகான தருணங்களைக் கொண்டிருக்கிறது ‘கபாலி’.
எல்லாவற்றையும் விட, ரஜினியின் அடுத்த கட்டப் பயணத்துக்குக் கட்டியம் கூறுவதற்காகவே ‘கபாலி’யைக் கொண்டாடலாம்.