சம்பள பாக்கியைப் பெற்றுத் தரக்கோரி போலீசாரிடம் புகாரளித்த நபரிடமிருந்து புதுச்சேரி போலீசார் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
வில்லியனூர் கோர்க்காட்டைச் சேர்ந்த சற்குணம் கோரிமேடு பகுதியில் வசித்து வரும் ஒருவரிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
ஏதோ ஒரு காரணத்திற்காக சற்குணத்திற்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் ரூபாய் 12 ஆயிரத்தை வாகன உரிமையாளர் வழங்கவில்லை.
இதனால் ஓட்டுநர் சற்குணம் கோரிமேடு டி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, எனக்கு வர வேண்டிய சம்பளத்தில் ரூ.10 ஆயிரமாவது பெற்றுத் தாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் காவல் துறையினர் சற்குணம் அளித்த புகார் மீது வழக்குப் பதியாமலே சம்மந்தப்பட்ட உரிமையாளரைத் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் வேறு வழியில்லாமல் ஒரு வழக்கறிஞரை சந்தித்த ஓட்டுநர் சற்குணம் சம்பளம் வழங்காத உரிமையாளர் மீது வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதனையடுத்து அந்த உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அந்த வழக்கறிஞர், சற்குணத்திற்கு தரவேண்டிய சம்பளத்தை தரவில்லை என்றால் வழக்குத் தொடர்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பள பாக்கித் தொகையான ரூ.12 ஆயிரத்தில் ரூ.7 ஆயிரத்தை வழக்கறிஞரிடமும்,
ரூ.5 ஆயிரத்தை போலீசாரிடமும் கொடுத்த உரிமையாளர், சற்குணத்திடம் ”நீ புகார் கொடுத்த இடத்திலேயே சென்று வாங்கிக் கொள் என்று கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து டி.நகர் காவல் நிலையத்திற்கு சென்ற ஓட்டுநர் சற்குணம் உரிமையாளர் கொடுத்த 5 ஆயிரம் ரூபாயைத் தருமாறு கேட்டிருக்கிறார். அப்போது அங்கு அமர்ந்திருந்த ஏ.எஸ்.ஐ மணி சற்குணத்திடம்,
உனக்கெல்லாம் இதை செய்ய வேண்டு மென்பது எங்களுக்குத் தலையெழுத்தாயா ? இதெல்லாம் கோர்ட்டுக்கு போனால் எல்லாம் முடியாது.
நீ ஏற்கெனவே ரூ. 7 ஆயிரம் வாங்கினாயே அதை என்னிடம் சொன்னியா ? இதுதான் விசுவாசமா ? இதான் நன்றியா ?
உனக்காக அந்த ஓனரை போனில் தொடர்பு கொண்டு இதை முடிக்க எனக்கு என்ன தலையெழுத்தா?. வக்கீல் வந்து என்னை என்ன செய்து விடப் போகிறார். நான் முடியாது என்று சொல்லி விட்டால் என்ன செய்வார்.
ஸ்டேஷனில் வந்து வாதாடுவாரா என்றவர் மேலும், வக்கீல் எல்லாம் கோர்ட்டில்தான் வேலையைக் காட்ட முடியும்.
இங்கே ஸ்டேஷனில் எல்லாம் காட்ட முடியாது என்று சொன்னவர் அருகிலிருந்த பாண்டுரங்கன் என்ற காவலரிடம், எவ்வளவுடா கொடுத்தான்
அவன் (உரிமையாளர்) என்று கேட்க அவர் ரூ.5,000 என்று சொன்னதும், அதிலிருந்து இரண்டாயிரத்தை எடுத்துக் கொண்டு மீதி மூன்றாயிரத்தை அவர்கிட்ட (சற்குணம்) கொடுத்து விடு என்று கூறியிருக்கிறார்.
அதற்கு சற்குணம், 500 ரூபாய் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, இவங்களுக் கெல்லாம் நான் கொடுக்கணும்ல என்று அருகிலிருந்து காவலர்களைக் காட்டியவர்,
அன்றைக்கு நீதானே ஓப்பனா சொன்னாய் 2,000 ரூபாய் நீங்க எடுத்துக்கங்கன்னு ? சோறு சாப்பிடுற வாயாலதான சொன்ன ? போப்பா என்று ஏ.எஸ்.ஐ மணி சொல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
இந்த உரையாடல்கள் அனைத்தையும் புதுச்சேரி போராளிகள் குழு என்ற அமைப்பு சற்குணனை கொண்டே, வீடியோவாக பதிவு செய்து இன்று காலை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உருளையன் பேட்டையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஆறுமுகம் என்பவர் இதே போன்று லஞ்சம் வாங்கும் போது அதை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ் அப்பில் வெளியிடப்பட்டது.
இதன் காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனல் அதன்பிறகும் இவர்கள் திருந்த வில்லையே என்று ஆதங்கப்படுகின்றனர் பொதுமக்கள்.
இன்று காலை வாட்ஸ்-அப்பில் பரவிய இந்த வீடியோ காட்சி குறித்து விசாரணை சீனியர் எஸ்.பி.ராஜிவ் ரஞ்சன், ஏ.எஸ்.ஐ மணி
மற்றும் காவலர் பாண்டுரங்கன் ஆகிய இருவரையும் உடனே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் முழு விசாரணை முடிந்தவுடன் அவர்கள் இருவரையும் பணிநீக்கம் செய்யவும் வாய்ப்புள்ளது. இதே போல் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் தனியாக பஞ்சாயத்து செய்தது
தொடர்பாக ஒரு காவலர் மீதும் விசாரணை நடந்து வருகிறது. லஞ்சம், ஒழுங்கீனத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்திருக்கிறார் அவர்.
யாராவது மிரட்டி லஞ்சமோ, மாமூலோ கேட்டால் எங்களிடம் தெரிவியுங்கள் என்று சிறிது நாட்களுக்கு முன்னர் காவல்துறை அறிவித்தது.
ஆனால் அந்த காவல் நிலையத்திலேயே லஞ்சம் கேட்கப்படும் போது யாரிடம் புகார் தெரிவிப்பது என்று குமுறுகின்றனர் பொதுமக்கள்.