பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் படுகாயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே அமைந்துள்ள
தாவோ நகரில் இரவுநேர சந்தைப் பகுதியில் அந்நாட்டு நேரப்படி இரவு வெள்ளிக் கிழமை இரவு 10.30 மணி அளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப் பட்டுள்ளது.
வார இறுதி நாள் என்பதால், அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது, திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
60க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். குறிப்பிட்ட இடத்தில் இருந்த கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இதனால், மீட்புப் பணிகள் மேற் கொள்வதில் தாமதம் நிலவுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏராளமான போலீசார் உள்பட மீட்புப் படையினர் முழுவீச்சில் இந்த பணிகளை மேற் கொண்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தகவல் இன்னும் வெளியாக வில்லை.
எனினும், இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப் படுவது உறுதி என்றும், நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக,
ஒற்றுமையுடன் இந்த பிரச்னையை எதிர் கொள்ள வேண்டும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ கேட்டுக் கொண்டுள்ளார்.