அப்பா அமிதாப்பச்சன், அம்மா ஜெயபாதுரி, மனைவி ஐஸ்வர்யாராய், மகள் ஆரத்யா ஆகியோர்களை பற்றி அபிஷேக்பச்சன் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வோமா!
அபிஷேக் பச்சனின் பேட்டி:
தொடர்ந்து வர்த்தக ரீதியான படங்களில் கவனம் செலுத்தி வருகிறீர்களே ஏன்?
சிறிய அளவிலான படம், பெரிய அளவிலான வெற்றி என்பது தான் இப்போதைய வெற்றி பார்முலா. புதிய இயக்குனர்கள் நல்ல கருத்துடன் உருவாக்கும் படங்களே மக்களைக் கவர்கிறது.
வர்த்த கரீதியான படங்கள் தான் இப்போது நிறைய வந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு தேவை போரடிக்காத படம் வேண்டும் அவ்வளவு தான்.
பெரும்பாலும் எனக்கும் கமர்சியல் படங்கள் தான் பொருந்துகின்றன. ஒரு படத்தில் நடிக்கும் போதே அந்த படம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை உங்களால் கணித்து விட முடியுமா?
யாருக்கும் புரியாத புதிர் அது. பரீட்சை எழுதும் மாணவர்களால் வெற்றி, தோல்வியை நிர்ணயித்து விட முடியும். படத்தில் நடித்துக் கொண்டிருப்ப வர்களால் கணிக்க முடியாது.
அப்படி கணிக்கும் சக்தி இருந்தால் நம்மால் தோல்விகளை தவிர்த்திட முடிந்திருக்குமே! படத்தின் வெற்றி தோல்வியை ரசிகர்களால் மட்டுமே கணிக்க முடிகிறது.
காற்றடிக்கும் திசையில் காற்றாடி பறப்பதை போல ரசிகர்களின் மனதிற்கேற்ப நாம் நடிக்க வேண்டும். அதனால் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்வதில் நடிகர்கள் எப்போதுமே கவனம் செலுத்த வேண்டும்.
சினிமாவில் நடிக்கும் ஆசை எப்போது வந்தது?
நான் சிறுவனாக இருக்கும் போதே அப்படி ஒரு ஆசை வந்துவிட்டது. என் அப்பா, அம்மாவிடம் சொன்னேன். எதை செய்தாலும் நம்பிக்கையோடு செய். உண்மையாக இரு.
வெற்றி உன்னைத் தேடி வரும். வாய்ப்பு வரும் வரை காத்திரு என்றார்கள். வாய்ப்பு வந்ததும் பயன்படுத்திக் கொண்டேன்.
அப்பா – அம்மா இருவரில் யாருடைய நடிப்பு உங்களுக்கு அதிகம் பிடிக்கும்?
அவர்களும் இதே கேள்வியைத் தான் கேட்பார்கள், திணறிப் போவேன். அம்மாவின் நடிப்பு மிகவும் இயல்பானது. அப்பாவின் நடிப்பு அட்டகாசமானது.
இன்றளவில் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். பலகோடி ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் அப்பாவின் நடிப்பே என்னை பிரமிக்க வைக்கிறது.
அமிதாப் மகன் என்பதால் பாலிவுட்டில் உங்களுக்கு சலுகை காட்டுகிறார்களா?
அப்படி எதுவுமில்லை. அப்பா புத்திசாலி என்பதால் பிள்ளைக்கு மார்க் போடுவார்களா? அவரவர் திறமைக்கு தக்கவாறான மரியாதை தான் கிடைக்கும்.
திரையில் வருபவர்கள் யாரென்று ரசிகர்கள் பார்ப்ப தில்லை. அது அவர்களுக்கு தேவையுமில்லை. நம் நடிப்பு அவர்களை கவர்ந்தால் மட்டுமே பாராட்டுவார்கள்.
ஐஸ்வர்யாராயிடம் நீங்கள் பெருமைப்படும் விஷயம்?
நல்ல மனைவி. பொறுப்பான தாய். நல்ல குடும்பத் தலைவி. குடும்ப நலனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவர். மிகவும் அமைதியானவர். பொறுப்புகளை எப்போதும் தட்டிக் கழிக்க மாட்டார்.
குழந்தை ஆராத்யாவை குளிப்பாட்டுவது, பள்ளிக்கு கூட்டிச் செல்வது, சாப்பாடு ஊட்டுவது, தூங்க வைப்பது எல்லாமே அவர் தான்.
அதில் அவருக்கு மகிழ்ச்சி. எனக்கு பெருமை. ஒரு நல்ல நடிகையாகவும் இதுவரை நல்ல பெயரையே பெற்றிருக்கிறார்.
கலைஞர்களுக்கு விருது எந்தளவிற்கு முக்கியமானது?
விருது முக்கியமானது தான். அதுவும் ஒரு சம்பளம் தான். கலைஞர்கள் மதிக்கப்பட வேண்டும். விருதுகள் அவர்களுக்கு சமூக அங்கீகாரம். அது கலைஞர்களை உற்சாகப் படுத்தும்.
முதன் முதலில் நடிக்க வந்த போது எப்படி இருந்தது? தற்போது எப்படி இருக்கிறது?
முதன் முதலில் நடிக்க வந்து கேமரா முன்பு நின்றதும் நான் அபிஷேக் இல்லை, குறிப்பிட்ட கதாபாத்திரம் என்று நினைத்து பணிசெய்ய ஆரம்பித்தேன்.
பக்கத்தில் சின்ன சத்தம் வந்தாலும் கவனம் சிதறி நடிப்பது நின்று விடும். இப்போது அப்படி இல்லை. சுற்றி என்ன நடந்தாலும் கவனம் சிதறாமல் நடிக்க முடிகிறது.
உங்கள் பெற்றோர் சொல்லும் அறிவுரை?
சொந்த விருப்பு வெறுப்புகளை படப்பிடிப்பில் பிரதிபலிக்கக் கூடாது என்பதைத் தான் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். நானும் அதை இன்றுவரை கடைப் பிடிக்கிறேன்.
எதற்காகவும் தயாரிப்பாளர்களை கட்டாயப் படுத்த கூடாது. நம்மால் அவர்களுக்கு லாபம் மட்டுமே வ ரவேண்டும் என்பதே என் பெற்றோரின் அறிவுரை.
15 ஆண்டுகால திரை வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?
நான் திரையுலகை விட்டு வெளியேறிய பின்புதான் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியும். அப்போது தான் நான் நடித்த அத்தனை படங்களையும் முழுமையாக உட்கார்ந்து பார்க்க நேரம் கிடைக்கும்.
எல்லோரும் குடும்பத்துடன் ஒன்றாக இருக்கும் போது என்ன பேசிக் கொள்வீர்கள்?
பெரும்பாலும் அம்மா அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். எந்த படத்தில் நடிக்கும் போது என்ன நடந்தது என்ற சுவாரசியமான விஷயங்களை சொல்வார்.
அம்மா என்னுடைய சிறுவயது குறும்பை ஐஸ்வர்யாவிடம் சொல்லி சந்தோஷப் படுவார்.
இன்றைய இளைஞர்களிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்? பிடிக்காத விஷயம்?
இன்றைய இளைஞர்களிடம் சுயமாக முடிவெடுத்து தங்களது எதிர்காலத்தை தாங்களே அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை வளர்ந்திருக்கிறது.
காதல் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு உயிரை விட யாரும் தயாராக இல்லை. கல்வியின் மதிப்பு உயர்ந்திருக்கிறது.
அதே நேரம், நவீன சாதனங்களை வைத்துக் கொண்டு உண்மையான உறவுகளை விட்டு விலகி விடுகிறார்கள்.
தொலைபேசி, வலை தளங்களில் நேரத்தை செலவளிப் பவர்களுக்கு குடும்பத்தாருடன் நேரம் செலவளிக்க முடியவில்லை. இப்படி ஒரு இயந்திர வாழ்க்கையை இளைஞர்கள் தவிர்ப்பது நல்லது.
உங்களுக்கு பிடித்த இயக்குனர்?
மன்மோகன் தேசாய், அற்புதமான இயக்குனர். அவருடைய கதா பாத்திரங்களில் ஜீவன் இருக்கும்.
என்றுமே நினைவை விட்டு அகலாதவை. நல்ல இயக்குனர் அமைவது ஒரு நடிகருக்கு வரம் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.
ஒருவருடைய வாழ்க்கையில் வரமாக மதிக்கப் படுவது எது?
நல்ல உறவுகள், உண்மையான நேசம் கொண்ட நட்புகள் தான் வரம். தற்போதுள்ள உறவுகளெல்லாம் எதையாவது எதிர் பார்த்து தான் அன்பு காட்டுவதாக இருக்கின்றன. ஆனால் நல்ல உறவுகளே மனித வாழ்வின் வரம்.
இயக்குனராகும் எண்ணம் உண்டா?
அப்படி ஏதுமில்லை. சினிமாவில் இயக்குனர் என்பது ஒரு பெரிய பதவி. எத்தனை நடிகரை வேண்டுமானாலும் ஒரு இயக்குனரால் உருவாக்கிட முடியும்.
அவர்களுக்கு அதீத கற்பனை சக்தி வேண்டும். என்ன செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இயக்கம் என்பது தனித்திறமை. அதை கற்றுக் கொள்வது எளிதல்ல.
கற்பனை சக்தி இல்லாதவர்கள் இயக்கத்தை கற்றுக் கொள்வது கடினம். சமூகத்தை, வாழ்க்கையை, மனித உறவுகளை படிக்கத் தெரிந்தவர்களே நல்ல இயக்குனர்கள்.