மனதை ஏழையாக்கும் பணம் !

2 minute read
இரவு படுக்கும் போது எல்லாம் சரியாகத் தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்து விட்டார்கள். காலையில் எல்லாம் மாறி விட்டன. 
மனதை ஏழையாக்கும் பணம்
பால் பாக்கெட் இல்லை. பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை யென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது?

மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… 'எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, 

எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக் கிட்டோம்' என்று உணவுப் பொருட்களைப் பதுக்கிக் கொண்டார்கள்.

வாங்கி வைத்திருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட, நாடு முழுவதும் உணவுப் பொருட்களைத் தேடி ஓட ஆரம்பித்தார்கள். 

ஐ.டி. நிறுவனங்கள், தொழிற் சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன.

கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன. அரசு ஊழியர்கள் எல்லோரு க்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப் பட்டது.

பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்துக்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது. எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும், மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்து வோரிடமும் மாதக் கட்டணமாகத் தங்கம் பெறப்பட்டது.
நாடே போர்க்களம் போல் அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்க… விவசாயிகள் மட்டும் எந்தவித பதற்றமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்குச் சென்று கொண்டி ருந்தார்கள். 

வாரச் சந்தைகளில் விவசாயி களிடம் அரிசி, பருப்பு வாங்க, நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர் களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்.

உணவுப் பொருட்களுக்காக பங்களா, கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது.

வேலை தேடி எல்லோரும் கிராமங் களுக்குச் செல்ல... மூன்று வேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் சம்பளமாக வழங்கப் பட்டன.

ஒட்டுமொத்த தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு, அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின. 
அரசுக்குத் தங்கம் பற்றாக் குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாகப் பெற்றார்கள். நாட்டு மக்கள் ஒவ்வொரு வருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப் போனது.

விவசாயத்தின் முக்கியத் துவத்தை எல்லோரும் உணர்ந்ததால், நிலத்தடி நீர் சேகரிக்கப் பட்டது.

வறண்ட பூமியெல்லாம் தவறாது மழை பெய்ததால் விவசாய நிலங்களாக மாறின. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான உணவுப் பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால்,

மீதி இருந்த உணவுப் பொருட்கள் வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப் பட்டன!
பணம் எனும் மாய வலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப் பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது.

தயவுசெய்து குறட்டையை நிறுத்தி விட்டுக் கொஞ்சம் கண் விழித்துப் பாருங்கள்… இது கனவு தான்.

ஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை. சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்தி கொண்டவை

இந்தக் கனவும் அப்படித்தான்...

உயிரற்ற காகிதத்தால் ஆன காசிற்காக,
உயிருள்ள
மனித இனமே,
மனித
இனத்தை அழித்து
கொண்டிருக்கிறது.
எங்கும் கலப்படம்,
எதிலும் கலப்படம்.

பணம் என்பது எந்த மனதையும் மயக்கும் மாயப் பேய். பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய, பணத்துக்கு நாம் அடிமையாகக் கூடாது!
Tags:
Today | 3, April 2025
Privacy and cookie settings