அதிமுகவில் சேர்ந்த நமீதா ஏன்?

நமீதாவின் சமீபத்திய அரசியல் பிரவேசம் தேர்தல் களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளுக்கு பெரிய ஷாக். காரணம், அவரது அரசியல் பிரவேசத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு. 
அதுவும் அதிமுகவில் சேர்ந்ததற்காக பொது மக்களிடமிருந்து கிடைத்து வரும் வாழ்த்துகள். பொதுவாக தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத நடிகைகளின் தேர்வு திராவிடக் கட்சிகளாக இருக்காது. குஷ்பு ஒரு விதிவிலக்கு. 

அவர் தமிழ்நாட்டு மருமகளாகிவிட்டதாலோ என்னமோ முதலில் திமுகவில் சேர்ந்து, அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல் காங்கிரஸுக்குப் போய்விட்டார்.

இன்னொருவர் சிம்ரன். அவர் முதலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து, பின்னர் அமைதியாகிவிட்டார்.

ஆனால் நமீதா நேரடியாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினாராகவே ஆகிவிட்டார். முந்தையவர்களாவது திரைத்துறையிலிருந்து ஒதுங்கி, திருமணம் செய்து குழந்தைப் பெற்ற பிறகு அரசியலுக்கு வந்தனர்.

ஆனால் நமீதா, இன்னும் சினிமாவில் இருக்கிறார், திருமணம் கூட ஆகவில்லை. இந்த ஒரு ஈர்ப்பு காரணமாகவோ என்னவோ, நமீதாவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது அதிமுகவினரிடையே. சரி, ஏன் அதிமுகவைத் தேர்ந்தெடுத்தார் நமீதா?

"நான் தேர்தலுக்காக அதிமுகவில் சேரவில்லை. நீண்ட நாட்களாகவே தமிழ் நாட்டில் செட்டிலாகி தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறேன். காரணம் இந்த நமீதாவை இந்த அளவுக்கு ஆளாக்கி விட்டவர்கள் தமிழ் மக்கள். 

என் வீடு சென்னையில்தான். என் ரேஷன் கார்டு சென்னையில்தான். நான் வாக்களிப்பதும் சென்னையில்தான். எல்லாமே எனக்கு சென்னைதான். இதுதான் இனி என் ஊர் என எப்போதோ முடிவு செய்துவிட்டேன்.

நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றதும் பல கட்சிகள் என்னைத் தொடர்பு கொண்டன. ஆனால் நான் அதிமுகவில்தான் சேர வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். அதனால் என்னை அழைத்த எந்தக் கட்சிக்கும் நான் பதில் கூறவில்லை.

புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி முறை, அவரது தலைமை, எந்த சோதனையிலும் உறுதியாக நிற்கும் இரும்புப் பெண்மணி என்ற அவரது இமேஜ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனது முதல் அரசியல் வழிகாட்டியாக அவரைத்தான் நான் நினைக்கிறேன். 

அதனால்தான் அதிமுகவில் சேர்வது முடிவு செய்து வைத்திருந்தேன். நானே விரும்பி கடிதம் கொடுத்தேன். அம்மாவின் அழைப்புக்காகக் காத்திருந்தேன். அதிமுகவில் நானும் ஒரு அங்கமாகிவிட்டேன். அவ்வளவுதான்.

இனி அம்மாவின் ஆணை என்னமோ அதன்படி செயல்படுவேன்," என்றார். கட்சியில் சேர்ந்த உடனே கச்சிதமாகப் பேசவும் கற்றுக் கொண்டுவிட்டார் நமீதா!
Tags:
Privacy and cookie settings