மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலியாகினர். புனே நகரின் கோந்த்வா பகுதியில் பேக்கரி ஒன்று உள்ளது.
அங்கு இன்று (வெள்ளிக் கிழமை) அதிகாலை 04.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பேக்கரியின் கதவு வெளிப்புறமாக பூட்டப் பட்டிருந்ததால் உள்ளே இருந்த ஊழியர்கள் மூச்சுத் திணறல் காரணமாக பலியானதாக கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் சம்பவம் நடந்த பேக்கரியில் வேலை பார்த்துவந்தனர்.
வேலை முடிந்தபின்னர் பேக்கரியிலேயே தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பேக்கரியின் உள்ளே இருந்த பரணில் தூங்குவது அவர்களின் வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை 4.45 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனே தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். பேக்கரியின் கதவில் வழியே புகை வந்துகொண்டிருந்தது.
ஆனால் வெளியில் இருந்து கடை பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் பூட்டை உடைக்க முயற்சித்தோம். அதற்குள்ளாக கடை உரிமையாளர் வந்து கதவைத் திறந்தார்.
கதவு திறக்கப்பட்ட உடனே, உள்ளே மிகப்பெரிய தீ ஜ்வாலையைக் கண்டோம். அப்போது தான் உள்ளே பணியாளர்கள் இருந்தது தெரிய வந்தது.
உடனே உரிய ஆடைகளை அணிந்து கொண்டு, பணியாளர்கள் இருந்த இடத்தை நோக்கி விரைந்தோம். அங்கே 6 பணியாளர்கள் மயக்கமடைந்த நிலையில் இருந்தனர்.
அவர்கள் உடனடியாக சசூன் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள். ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றார்.
விபத்தில் இறந்தவர்கள் இஷாத் அன்சாரி (26), ஜனத் அன்சாரி (25), ஷனு அன்சாரி (20), ஜாகீர் அன்சாரி (24), ஃபயீம் அன்சாரி (21) மற்றும் சிஷான் அன்சாரி (21) என அடையாளம் தெரிய வந்தது.
பேக்கரியின் பிரதானக் கதவு வெளியில் பூட்டப் பட்டிருந்ததால், பணியாளர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப் படுவதாக கோந்த்வா சரக காவல் நிலையம் தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments