500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப் பட்டதால், மக்களுக்கு நேர்ந்த பிரச்சனைகள் யாவும் இன்னும் சிறிது நேரத்தில் முடிவுக்கு வந்துவிடுமா என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் பிரதமர் மோதி டிசம்பர் 30ம் தேதி வரை அவகாசம் கேட்டிருந்தார் என்றும் அந்த நேரம் முடியும் தருணத்தில் மக்கள் தங்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்று எண்ணுவது மிகவும் நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.
மக்களின் எதிர் பார்ப்புகளைப் பட்டியலிட்ட ப.சிதம்பரம், ''நவம்பர் 8 ஆம் தேதி விதிக்கப் பட்டிருந்த கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டு, 2017ல் ஜனவரி 2ம் தேதி பொது மக்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதில் எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணு கிறார்கள்,'' என்றார்.
அவர் மேலும், ''ஏ டி எம் மையங்கள் முன் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கத் தேவையற்ற நிலை, அனைத்து ஏ டி எம்களிலும் தேவையான அளவு பணம் நிரப்பப்பட்டு, நாள் முழுவதும் அவர்கள் பணம் எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்,'' என்றார்.
50 நாட்கள் அவகாசத்தின் முடிவில் பிரதமர் மோதி மக்களிடம் உரையாற்றும் போது, எல்லா கட்டுப் பாடுகளும் நீக்கப்பட்டு விட்டது என்று அவர் அறிவிப்பார் என்று எண்ணுவார்கள் என்றார்.
பா.சிதம்பரம் மோதி அறிவித்தது போல, கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டு விடும் என்பதும், இனி யாரும் லஞ்சம் கொடுக்க மாட்டார்கள் என்பதற்கும் எந்த உத்தர வாதமும் கிடையாது என்றும்
இந்த 50 நாட்களில் புதிய ரூ.2,000 நோட்டுகள் பதுக்கப் படுவதும், புதிய நோட்டுகள் லஞ்சமாகக் கொடுக்கப் பட்டதும் நடந்துள்ளது என்றார்.
இந்த மாற்றத்தால் விவசாயிகள், சிறு வியாபாரிகள் தான் மிகவும் சிரமப் பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு அரசு எந்த வித நஷ்டஈடு கொடுப்பது என்பது பற்றிப் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
நவம்பர் 8-ஆம் தேதியன்று, உயர் மதிப்பு ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று நடந்த ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்ட விவரங்களை வெளியிட முடியுமா என்றும்,
மத்திய அமைச்சரவை முன்பு வைக்கப்பட்ட அது தொடர்பான குறிப்புக் குறித்து வெளியிட முடியுமா என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Thanks for Your Comments